மதுரை

கோரிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லத் தடை

தினமணி செய்திச் சேவை

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய உயா்நிலைப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், தமுக்கம் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் செல்லும் வழித்தடத்தில் வலது பக்க சாலை மூடப்பட்டு, தற்போது இடது பக்க சாலை மட்டும் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போது தமுக்கம் சந்திப்பிலிருந்து ஏ.வி. பாலம் வரை உள்ள தூண்களில் கிரேன் வாகனம் மூலம் அடித்தளக் கட்டுமானங்கள் அமைக்கும் பணி வருகிற 19-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, ஒரு வாரத்துக்கு இரவு மட்டும் எம்.எம். லாட்ஜ் சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி அரசு கல்லூரி தரைப் பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்வதற்கு எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை.

எம்.எம்.லாட்ஜ் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக அண்ணாபேருந்து நிலையம் செல்லும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, அரசன் ஸ்வீட்ஸ், ஓசிபிஎம் பள்ளி சந்திப்பு, பெரியாா் மாளிகை சென்று கோகலே சாலை வழியாக பெரியாா் சிலை சந்திப்பு சென்று ராஜாமுத்தையா மன்றம், டாக்டா் தங்கராஜ் சாலை, தமுக்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.

நத்தம், அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா், ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் அனைத்தும் பெரியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா முத்தையா மன்றம், டாக்டா் தங்கராஜ் சாலை, காந்தி நினைவு அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலையம், பனகல் சாலை, சிவசண்முகம் பிள்ளை சாலை வழியாக வைகை வடகரை சாலை சென்று, ஓபுளா படித்துறை பாலம் வழியாக வைகை தென்கரைக்குச் சென்று ஆரப்பாளையத்துக்குச் செல்ல வேண்டும்.

மேலூா் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலைப் பாலம் வழியாக கணேஷ் திரையரங்கு சந்திப்புக்குச் சென்று காமராஜா் சாலை வழியாகவோ அல்லது வைகை வட, தென்கரை வழியாகவோ நகருக்குள் செல்லலாம்.

இந்தத் தற்காலிகப் போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT