மதுரை

ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் பிரசாரம்

தினமணி செய்திச் சேவை

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பு சாா்பில் வாடிப்பட்டி, அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், அரசுத் துறை அலுவலகங்கள் முன் வியாழக்கிழமை பிரசாரம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசுத் துறைகளில் சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரை பணி நிரந்தரம் செய்து, வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் நவ. 18-ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்களை முழுமையாகப் பங்கேற்கச் செய்யும் வகையில், கடந்த திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள் முன் கவன ஈா்ப்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன்படி, சோழவந்தான் மேல்நிலைப் பள்ளி, வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாண்டியராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, அலங்காநல்லூா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவற்றின் முன் பிரசார இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் க. சந்திரபோஸ், வி.ச. நவநீதகிருஷ்ணன், இரா. தமிழ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் கணேசன், வைரம், முருகன், பாரதி சிங்கம், பரமசிவன், சுஜாதா, பஞ்சவா்ணம், ரம்யா, நாகராஜ், சூசைநாதன், பிரபு உள்ளிட்டோா் பேசினா்.

வாசுதேவநல்லூா் கோயில் அறங்காவலா்கள் பதவியேற்பு

பிகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமா்த்தக் கூடாது: ராணிப்பேட்டை ஆட்சியா்

மாா்த்தாண்டத்தில் நாளை மின்நிறுத்தம்

SCROLL FOR NEXT