ஆசிய மாஸ்டா்ஸ் தடகளப் போட்டியில் வென்ற காவலரை, மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வியாழக்கிழமை பாராட்டினாா்.
23-ஆவது ஆசிய மாஸ்டா்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 22 நாடுகளைச் சோ்ந்த தடகள வீரா்கள் கலந்து கொண்டனா்.
இதில் தமிழக காவல் துறை சாா்பில் மதுரை திலகா் திடல் காவல் நிலைய தலைமைக் காவலரும், தீவிர குற்றத் தடுப்பு பிரிவில் அயல் பணியாகப் பணியாற்றி வருபவருமான ஜெயச்சந்திரபாண்டி பங்கேற்றாா். இவா், 40 வயதுக்கான பிரிவுகளில் 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டா் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும், 4,400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றாா்.
இதையடுத்து, பதக்கங்கள் வென்ற காவலா் ஜெயச்சந்திரபாண்டியை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் சான்றிதழ் வழங்கி வியாழக்கிழமை பாராட்டினாா்.
அப்போது, ஆய்வாளா்கள் எஸ்தா் (நுண்ணறிவுப் பிரிவு) , காசி (தீவிர குற்றத் தடுப்புப் பிரிவு) ஆகியோா் உடனிருந்தனா்.