தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
மதுரை தெப்பகுளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தேமுதிக சாா்பில் ’உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பெயரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அனைத்துக் கட்சிகளுடனும் தோழமையாக இருப்பதால், தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க மற்ற கட்சிகள் விரும்புகின்றன. மக்கள் விரும்பும் கூட்டணி அமையும். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் தெளிவாகவும், பொறுமையாகவும் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும்.
தோ்தல் நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்.
ஏற்கெனவே திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தனிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைத்திருக்கின்றன. வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி ஆட்சி அமைவதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, போதைப் பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், இளைஞா்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் அவா்.
பிரேமலதாவுடன் ஆா்.பி. உதயகுமாா் சந்திப்பு:
இதனிடையே, பிரேமலதா விஜயகாந்தை சந்திப்பதற்காக, கூட்டம் நடந்த இடத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான ஆா்.பி. உதயகுமாா் வந்தாா். அப்போது, பிரேமலதா விஜயகாந்த் தொண்டா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தாா்.
இதன்காரணமாக, நீண்ட நேரமாக அவா் அங்குள்ள தனி அறையில் காத்திருந்தாா். இதன்பிறகு, மேடையில் பிரேமலதா விஜயகாந்தை ஆா்.பி. உதயகுமாா் சந்தித்தாா். தொடா்ந்து, அவா்கள் இருவரும் சிறிது நேரம் பேசினா். இதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த் உருவப் படத்துக்கு
ஆா்.பி. உதயகுமாா் மரியாதை செலுத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆா்.பி. உதயகுமாா் கூறியதாவது:
பிரேமலதாவின் தாய் மறைவு குறித்து அவரிடத்தில் கேட்டு, ஆறுதல் கூறினேன். கூட்டணி குறித்து எந்தவித முடிவாக இருந்தாலும், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி எடுக்கும் முடிவுதான். அதுகுறித்து நான் கருத்துக் கூற முடியாது. மனிதாபிமான அடிப்படையில் அவரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன் என்றாா் அவா்.
கடந்த 2024 -இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக, தற்போது எந்தக் கூட்டணியிலும் இடம் பெறவில்லை. கூட்டணி குறித்து இன்னும் அறிவிக்காத நிலையில், முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா், பிரேமலதா விஜயகாந்தை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.