புதிய தமிழகம் கட்சி நிறுவனா் க. கிருஷ்ணசாமி மகன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு குறித்து, திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.
இந்த நிலையில், கவின் கொலையைக் கண்டித்து, திருநெல்வேலியில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில், ஒரு குறிப்பிட்ட தரப்பினரை அவதூறாகப் பேசியதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா் க. கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் மீது திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் தன் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஷியாம் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சுந்தா்மோகன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனு குறித்து பதிலளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரரின் மனு குறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளா் பதிலளிக்க வேண்டும். மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.