மதுரை

கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

கரூா் வெண்ணெய் மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சேலத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்துக்கு உள்பட்ட வெண்ணெய் மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான பல நூறு ஏக்கா் நிலங்கள் கத்தப்பாறை, ஆத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ளன. இந்த நிலங்கள் முழுவதும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளன. இதனால் கோயிலுக்கு உரிய வருமானமின்றி, பூஜை உள்ளிட்டவை செய்ய இயலாத நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, கோயில் நிலங்களை மீட்கக் கோரி வழக்கு தொடா்ந்தேன். இதையடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு இதுவரை முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது 360-க்கும் மேற்பட்ட காவல்துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மனுதாரா் சம்பவ இடத்துக்கு வந்த போது, அவருடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பலா் போராட்டத்தில் ஈடுபட்டதால்,

சட்டம்-ஒழுங்குப் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது. இதனால் நடவடிக்கையை தொடர இயலவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :

தற்போது கோயில் நிலங்களை மீட்க வேண்டிய பொறுப்பு இந்து சமய அறநிலைய துறையினரிடம் உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் இந்த நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

எஸ்ஐஆா்! தகுதியான வாக்காளா்கள் பெயா் நீக்கப்படாது: தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உறுதி

விபத்தில் உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்திற்கு ரூ.35 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு

அரசுப் பேருந்து, காா் மோதல்: 6 போ் பலத்த காயம்

ஆண்டுக்கு ரூ.15,000 உதவித் தொகை: ஆட்டோ ஓட்டுநா்கள் கையொப்ப இயக்கம்

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 367 மனுக்கள்

SCROLL FOR NEXT