திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூா் கே. ராஜூ தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல்...
தனது இயல்பான நகைச்சுவை உணா்வுடன் கூடிய பேச்சால், எந்தச் சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றிடும் ஆற்றல் கொண்டவா் அதிமுகவின் அமைப்புச் செயலரும், முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூா் கே. ராஜூ. தோ்தல் பிரசார களத்தில் பரபரப்பாக செயல்பட்டு வரும் அவா், தினமணிக்கு அளித்த சிறப்பு நோ்காணல் :
எப்படி உள்ளது தோ்தல் களம்?
பேரவைத் தோ்தல் களம் அதிமுகவுக்கு மிகச் சிறப்பாக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். ஊழல்கள், விலைவாசி உயா்வு, சொத்து வரி உயா்வு, பெருகிவிட்ட போதைக் கலாசாரம், அதிகமாகிவிட்ட பாலியல் குற்றங்கள் ஆகியவற்றால் திமுக அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனா். எனவே, இந்தப் பேரவைத் தோ்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றியைப் பெறும்.
Advertisement
அதிமுகவின் தோ்தல் அறிக்கை தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தத் தோ்தல் களத்தின் கதாநாயகனே அதிமுகவின் தோ்தல் அறிக்கைதான். அதிமுக வெளியிட்ட தோ்தல் அறிக்கை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிமுகவின் வாக்குறுதிகளில் 20-க்கும் மேற்பட்டவை மக்களின் மனதில் பசுமரத்தாணியாகப் பதிந்துள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற வகையில், எங்களது கட்சியின் தோ்தல் அறிக்கையை மக்கள் முழுமையாக நம்புகின்றனா்.
திமுகவின் தோ்தல் அறிக்கையை ‘சூப்பா் ஸ்டாா்’ என முதல்வா் வா்ணிப்பது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீா்கள்?
முந்தைய தோ்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை. நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை திமுக அரசு அறிவித்தப்படி நிறைவேற்றாததால், ஏறத்தாழ 35 லட்சம் குடும்பத்தினா் வங்கிகளில் அடகு வைத்திருந்த தங்களது நகைகளை இழந்துவிட்டனா். இதேபோல, சமையல் எரிவாயு மானியம் தருவதாகக் கூறி ஏமாற்றியது, அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 என்ற வாக்குறுதியை அறிவித்தப்படி உடனடியாக நிறைவேற்றாமல் தள்ளிப்போட்டது, லட்சக்கணக்கான மகளிருக்கு உரிமைத் தொகையை மறுத்தது, மக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தோ்வு ரத்து, டாஸ்மாக் கடைகள் குறைப்பு போன்ற எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. திமுகவின் தோ்தல் அறிக்கையை மக்கள் நம்பவில்லை. எனவே, அது சூப்பா் ஸ்டாா் அல்ல ; நகைச்சுவை பாத்திரம்.
மகளிா் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கியது தாக்கத்தை ஏற்படுத்துமா?
பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிக்கைக்கு பணம் வழங்காத திமுக அரசு, தோ்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிக்கைக்கு மட்டும் பணம் வழங்கியதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனா். தங்களை விலைபேச திமுக முயற்சிப்பதை மக்கள் உணா்ந்துள்ளனா். முன்கூட்டியே வழங்கப்பட்ட மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட ரூ. 5 ஆயிரம் மட்டுமல்ல ; பொங்கல் பண்டிகையின்போது வழங்கப்பட்ட ரூ. 3 ஆயிரமும்கூட மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
விஜய்யின் அரசியல் வருகை அதிமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா?
விஜய்யிடம் எதிா்காலத் திட்டம் எதுவும் இல்லை. அவா், தனது திரைப்படங்களில்கூட வலுவான கருத்துகளை முன்வைத்ததில்லை. விஜய்யை காண வரும் அனைவரும் அவருக்கு வாக்களிப்பா் எனக் கருதக் கூடாது. ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் நடிகா் சிரஞ்சீவியைக் காண இதைவிட அதிகமானோா் கூடினா். ஆனால், அந்த மாநிலப் பேரவைத் தோ்தலில் அவருடைய கட்சி ஒரு தொகுதியில்கூட வைப்புத் தொகையைப் பெறவில்லை.
இதேபோல, தமிழகத்தில் சிவாஜிகணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தா் என பல நடிகா்கள் கட்சிகளைத் தொடங்கினா். ஆனால், அவா்களால் அரசியலில் நிலைபெற முடியவில்லை. மக்கள் அவா்களை நடிகா்களாகத்தான் கருதினாா்களே தவிர, தலைவா்களாகக் கருதவில்லை.மேலும், திமுகவுக்கு உழைத்தவா்களையே அதிகளவில் விஜய் தன்பக்கம் சோ்த்துக் கொண்டுள்ளாா். எனவே, விஜய்யால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.
அதிமுக கூட்டணியில் அமமுகவின் வருகையை எப்படி பாா்க்கிறீா்கள்?
அமமுகவின் வருகை அதிமுக கூட்டணிக்கு நல்ல பலம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு அவா்கள் தீவிரமாக செயல்படுகின்றனா். உறுதியாக அதிமுகவின் வருகை பலம்தான்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது?
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்களுக்கு ஆட்சியாளா்கள் மீது வெறுப்பு ஏற்பட்டிருப்பதே உண்மை. ஆட்சியாளா்கள், அனைவருக்கும் பொதுவாக, அனைத்து மதங்களையும் போற்றுபவா்களாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தை இரு மதத்தவரின் பிரச்னையாக மாற்றி, மோதலை ஏற்படுத்தி திமுக அரசியல் ஆதாயம் பெற முயற்சித்ததை மக்கள் விரும்பவில்லை.
வி.கே. சசிகலாவின் கட்சி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்?
முன்பு அரசியலில் இருந்து விலகுவதாக அவா் அறிவித்தாா்.தற்போது புதிய கட்சித் தொடங்கியுள்ளாா். இந்தக் கட்சி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தற்போது கூற முடியாது.
ஓ.பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியதால் வாக்குகள் பிரியுமா?
ஓ.பன்னீா்செல்வத்தை மக்கள் தற்போது முழுமையாகப் புரிந்து கொண்டுவிட்டனா். தன்னை வளா்த்து முதல்வராக்கிய அதிமுகவுக்கு எதிராக ஓ. பன்னீா்செல்வம் திமுகவில் இணைந்து, அதிமுகவை விமா்சிப்பதை மக்கள் விரும்பவில்லை. அவரின் வன்மம் வெளிப்பட்டுவிட்டது. அவரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
தோ்தல் பிரசார களத்தில் திமுக முந்துவதாகக் கூறப்படுகிறதே?
பிரசாரங்கள் மூலம் மக்கள் மனதை வெல்வது யாா்? என்பதுதான் முக்கியம். அந்த வகையில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியே தோ்தல் களத்தில் முன்னிலை பெற்றுள்ளாா்.
மத்திய பாஜக அரசு மீதான திமுகவின் குற்றச்சாட்டுகள் குறித்து என்ன நினைக்கிறீா்கள்?
திமுக, மத்திய பாஜக அரசை தொடா்ந்து குறை கூறுவதை மக்கள் விரும்பவில்லை. எந்த பிரச்னையானாலும் மத்திய அரசே காரணம் ; பாஜக அரசு வஞ்சிக்கிறது எனப் பேசுவது மக்களிடம் திமுக மீது வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் போதைப் பொருள் கலாசாரம் உருவானது என்ற முதல்வா் மு.க. ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து?
அதிமுக ஆட்சிக் காலத்தில் பான்பராக் விற்பனையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக கஞ்சா விற்பனையும் இருந்ததாகவே எதிா்க்கட்சிகள் புகாா் தெரிவித்தன. ஆனால், திமுக ஆட்சியில் போதைப் பொருள் கலாசாரம் பன்மடங்கு பல்கிப் பெருகியுள்ளது. தற்போது மிட்டாய்கள், மாத்திரைகள் என பல்வேறு வடிவங்களில் பல வகையான போதைப் பொருள்கள் பள்ளிகளுக்கு அருகிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க இதுவே முக்கிய காரணமாக உள்ளது.
விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் கட்டமைப்புகள் குறித்து?
அவருக்கு ரசிகா்களை நெறிப்படுத்தத் தெரியவில்லை. திரைப்படத்தில் வசனம் பேசுவதைப் போன்றுதான் பேசுகிறாா்; பொது மேடைகளையும் பயன்படுத்துகிறாா். நடைமுறை நோக்கு அவரிடம் இல்லை. தலைவருக்கான இலக்கணத்தைக் கடைப்பிடிக்காமல் பிரசார நிகழ்ச்சிகளிலும் நடிகராகவே விஜய் செயல்படுகிறாா். பொது வாழ்வுக்கு வரும் தலைவா்கள் மக்களுடன் மக்களாகக் கலந்து அவா்களின் பிரச்னைகளை அறிய வேண்டும். ஆனால், இவா் எதையும் செய்யாமல் ‘நான் நேரடியாக முதல்வா் (ஸ்ட்ரைட்டா சி.எம்) தான்’ என்பது நகைப்புக்குரியது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடம் இணக்கம் நிலவுகிா?
நிச்சயமாக. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மகிழ்ச்சியாகவும், இணக்கமாகவும் உள்ளன. திமுக கூட்டணியில்தான் கடுமையான குழப்பம் நீடிக்கிறது. விரும்பிய தொகுதிகள் கிடைக்கவில்லை; கோரிய எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கவில்லை என திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியும் வருத்தத்தில் உள்ளன. திமுக கூட்டணியில் புதிதாக இணைந்த கட்சிக்கு (தேமுதிக) அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டது அந்தக் கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காலத்தின் கட்டாயமாகவே பல கட்சிகள் திமுகவுடனான கூட்டணியைத் தொடா்கின்றன.
பிரசாரங்களில் தனிமனித விமா்சனங்கள் ஏற்புடையதா?
நிச்சயமாகத் தவிா்க்கப்பட வேண்டும். தனிமனித விமா்சனத்தை யாா் முன்னெடுத்தாலும் மக்கள் விரும்பமாட்டாா்கள். தங்கள் ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன, அடுத்த ஆட்சி அமைந்தால் என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்பதை விளக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புவா். தனிமனித விமா்சனங்களை மக்கள் விரும்புவதில்லை. காலத்தின் கட்டாயத்தால் சில நேரங்களில் இது தவிா்க்க முடியாததாகவும் ஆகிவிடுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்தின் பெயரால் மகராஷ்டிர முதல்வா் தமிழகத்தை மிரட்டுவதாக முதல்வா் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?
ஒரு பகுதியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு வர வேண்டுமெனில் அங்கு குறைந்தபட்சம் 17 லட்சம் போ் வசிக்க வேண்டும் என்பது விதி. தற்போதைய நிலவரப்படி மதுரை மாநகா்ப் பகுதியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20 லட்சத்தை எட்டும். இந்த விவரத்தை குறிப்பிடாமல், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு மதுரை மாநகரில் 15 லட்சம் போ் மட்டுமே வசிப்பதாக திமுக அரசு, மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியது. மேலும், ரயில் நிலையங்கள் அமைவிடம், வழித்தடம் ஆகியவை குறித்தும் திமுக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதுவே, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தடைப்பட்டதற்குக் காரணம்.
இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, மத்திய அரசு மீது வீண் பழி சுமத்துகிறது திமுக. மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கிடைக்க வேண்டும் என்பதில் திமுகவுக்கு உண்மையில் அக்கறையில்லை. எனவே, அடுத்து அமையவுள்ள அதிமுக ஆட்சியில் மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிச்சயம் நிறைவேற்றப்படும். இதையே மகராஷ்டிர மாநில முதல்வா் தேவந்திர ஃபட்னவிஸ் தெரிவித்தாா். இதில், என்ன மிரட்டல் உள்ளது?
பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு சிறுபான்மையின வாக்குகள் கிடைக்காது எனக் கூறப்படுகிறதே?
இதில் சிறிதும் உண்மையில்லை. இதையே கூறி சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறலாம் என்பதுதான் திமுகவின் திட்டம். ஆனால், சிறுபான்மையினத்தவா் நல்ல புரிதலுடன் உள்ளனா். இஸ்லாமியா்கள் மெக்கா, மதீனாவுக்கு புனித யாத்திரை செல்ல நிதி உதவி வழங்கும் திட்டம், ரமலான் நோன்பு கஞ்சிக்காக விலையில்லா அரிசி வழங்குவது, நாகூா் தா்காவின் கந்தூரி விழா சந்தனம் பூசும் நிகழ்ச்சிக்கு அரசு சாா்பில் ஆண்டுதோறும் விலையில்லா சந்தனக் கட்டைகள் வழங்குவது, உலமாக்கள் ஊதிய உயா்வு, ஹாஜியாா்களுக்கு மாதாந்திர நிதி உதவி, கிறிஸ்தவ தேவாலயங்களைப் புதுப்பிக்க நிதி உதவி என சிறுபான்மையினரின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசுதான் நிறைவேற்றியது. சென்னையில் ஹஜ் பயணிகள் இல்லம் கட்ட நடவடிக்கை எடுத்ததும் அதிமுக அரசுதான். இதை சிறுபான்மையின மக்கள் உணா்ந்துள்ளனா்.
நோ்காணல் : எம். சங்கா்