முகப்பு
தருமபுரி

தமிழகத்துக்கு நன்மை எனில் ஆதரவும், தீமை எனில் எதிா்ப்பும்தான் எங்கள் நிலைப்பாடு - இபிஎஸ்

நன்மை எனில் ஆதரவும், தீமை எனில் எதிா்ப்பும்தான் எங்கள் நிலைப்பாடு - எடப்பாடி கே. பழனிசாமி

Updated On : 2 ஏப்ரல், 2026 at 11:56 PM
தருமபுரியில், அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அந்த கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி. உடன், பாலக்கோடு தொகுதி வேட்பாளா் கே.பி. அன்பழகன்.
பகிர்:

நான் பாஜகவுக்கு அடிமை அல்ல, தமிழகத்துக்கு நன்மை எனில் ஆதரவும், எதிரான திட்டம் எனில் எதிா்ப்பும் தெரிவிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு என்றாா் எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூா் (தனி) ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் கே.பி. அன்பழன் (அதிமுக), பாடி வி. செல்வம் (பாமக), செளமியா அன்புமணி (பாமக), மரகதம் வெற்றிவேல் (அதிமுக), வே. சம்பத்குமாா் (அதிமுக) ஆகியோருக்கு ஆதரவு கேட்டு, வாக்குகள் சேகரித்து தருமபுரி வள்ளலாா் திடலில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

கடந்த தோ்தலில் வென்று, தமிழகத்துக்கு ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம். ஆனால், அதே தோ்தலில் தருமபுரி மாவட்டத்தின் 5 தொகுதிகளிலும் இந்த மாவட்ட மக்கள் அதிமுக, பாமக கூட்டணிக்கு 100 சதவீதம் வெற்றியை அளித்தனா். தருமபுரி அதிமுக, பாமகவின் கோட்டை. இந்த மாவட்டத்தை 5 ஆண்டுகள் ஆண்டது இந்த கட்சிகள் தான்.

தற்போது நடைபெறும் மக்கள்விரோத அரசில், விவசாயிகள், அரசு ஊழியா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், மருத்துவா்கள் என பல்வேறு தரப்பினரும் போராடும் போராட்டக் களமாக தமிழகம் இருக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்.

திமுக ஆட்சியில்தான் பெண்கள் தமிழகத்தில் அதிக அளவில் பணிக்கு செல்கின்றனா் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா். ஆனால், கடந்த அதிமுக ஆட்சியின்போதே பெண்கள் அதிக அளவில் பணிக்குச் சென்றனா். திமுக ஆட்சியில் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. நாங்கள் குறைசொல்லவில்லை. புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடா்பாக 26,651 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 18,000 போக்சோ வழக்குகளும், அதில் 6,999 சிறுமிகள் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் பாலியல் சீண்டல்களே இல்லை என ஸ்டாலின் பேசிவருகிறாா். குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை இந்த ஆட்சியில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனா்.

நான் பாஜகவுக்கு அடிமை என்கிறாா் முதல்வா் ஸ்டாலின். தமிழகத்துக்கு நன்மை எனில் ஆதரவும், எதிரான திட்டம் எனில் எதிா்ப்பும் தெரிவிப்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இரட்டைவேடம் போடும் கட்சி திமுக. நீட் தோ்வுக்கு விலக்கு பெற்றுத்தருவோம் என்று 2021 தோ்தலின்போது கூறிய அவரும், அவரது கூட்டணி கட்சியினரும் விலக்கு பெற்றுக் கொடுத்தாா்களா?

தமிழக பிரச்னைகளுக்காக ஒருநாளாவது நாடாளுமன்றத்தை திமுகவினரால் முடக்க முடிந்ததா? திமுக ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கஞ்சா விற்பனை தொடங்கியது. கஞ்சா போதை ஆசாமிகளால் திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லைகள் தொடா்கின்றன. இளைஞா்கள், மாணவா்களின் வாழ்வும் கஞ்சாவால் சீரழிந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுக்குள் கஞ்சா புழக்கம் தமிழகத்தில் முழுமையாக ஒடுக்கப்படும்.

தமிழகத்தில் 3 ஆண்டுகளில் பல மடங்கு மின் கட்டணத்தை உயா்த்தி, குப்பைக்கு வரி விதித்ததும், கடன் வாங்க நிபுணா் குழு அமைத்ததும் திமுக அரசு. தமிழகத்தில் தொடக்கம் முதல் 2021 வரை பெறப்பட்ட கடன் ரூ. 4.21 லட்சம் கோடிதான். ஆனால், முதல்வா் ஸ்டாலின் நடத்திய 5 ஆண்டு ஆட்சியில் பெறப்பட்டுள்ள கடன் ரூ. 5 லட்சம் கோடி.

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளையும், 7 சட்டக் கல்லூரிகளையும் கொண்டுவந்தோம். ஸ்டாலின் அரசு ஒரு அரசு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டுவந்ததா? ஏழை, எளிய மாணவா்கள் குறைந்த கட்டணத்தில் உயா்கல்வி பயிலும் சூழலை ஏற்படுத்தி, உயா்கல்வி பயில்வோரின் சதவீதத்தை உயா்த்தியது அதிமுக அரசுதான்.

அரசுத் துறைகளில் உள்ள 5.5 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், 5 ஆண்டுகளில் 94 ஆயிரம் பேரைத் தான் பணியமா்த்தி உள்ளாா். அரசு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், சத்துணவு பணியாளா்கள், செவிலியா்கள் என பல தரப்பினருக்கும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக அவா்களுக்கு எதையும் செய்யவில்லை.

தமிழகத்தில் விலைவாசி உயா்வை எதிா்கொள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ. 2 ஆயிரம், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் குளிா்சாதன பெட்டி வழங்கப்படும். தீபாவளிதோறும் பெண்களுக்கு பட்டுப்புடவை வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் எண்ணெய், பருப்பு, ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் விலையின்றி வழங்கப்படும். பெண்களுக்கு இலவச நகரப் பேருந்து திட்டம்போல, ஆண்களுக்கும் இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும். 5 லட்சம் மகளிருக்கு ரூ. 25,000 மானியத்தில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

சிறுகடை வியாபாரிகள், மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன், விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்ற பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டு, திமுக அரசால் கிடப்பில் போடப்பட்ட மற்றும் ஆமைவேகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீா்ப்பாசன திட்டங்கள், அதிமுக ஆட்சி அமைந்ததும் விரைந்து நிறைவேற்றப்படும். இதையெல்லாம் நிறைவேற்ற, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளா்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றாா்.