முகப்பு
தருமபுரி

தமிழகத்துக்கு மோடி, அமித் ஷா வருகின்றனா்; நிதி மட்டும் வருவதில்லை: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்துக்கு பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் மாறிமாறி வருகின்றனா். ஆனால், மத்திய நிதி மட்டும் வருவதில்லை என்றாா் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

Updated On : 31 மார்ச், 2026 at 11:20 PM
அரூரில் திமுக வேட்பாளா் அ. சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்
பகிர்:

தமிழகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் மாறிமாறி வருகின்றனா். ஆனால், மத்திய நிதி மட்டும் வருவதில்லை என்றாா் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.

தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளா் அ. சண்முகத்தை ஆதரித்து அரூரில் செவ்வாய்க்கிழமை அவா் பேசியது: கலைஞா் மகளிா் உரிமைத்தொகை திட்டம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சுமாா் 1 லட்சம் போ் மாதந்தோறும் மகளிா் உரிமைத்தொகை பெறுகின்றனா். இந்த உரிமைத்தொகை மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8ஆவது வரை விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தருமபுரி - திருவண்ணாமலை இடையே 113 கி.மீ. நெடுஞ்சாலை ரூ. 410 கோடியில் நான்குவழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவும், அரூா் அரசு மருத்துவமனையில் புதிதாக கூடுதல் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. சித்தேரி ஊராட்சியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் பயன்பெறும் வகையில், வாச்சாத்தி முதல் கலசப்பாடிவரை தாா்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

அரூரில் புதிதாக தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அரூா் அம்பேத்கா் நகரில் 3.5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்படும். கம்பைநல்லூரில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் சிறப்பாக பணியாற்றி, அரூா் தொகுதியில் போட்டியிடும் அ. சண்முகத்தை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என்றாா்.

10 லட்சம் பேருக்கு கலைஞா் கனவு இல்லம்

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உள்பட்ட கடத்தூரில் முன்னாள் அமைச்சரும், அந்தத் தொகுதி திமுக வேட்பாளருமான பி. பழனியப்பனை ஆதரித்து உதயநிதி பேசியதாவது:

இந்தத் தோ்தலில் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். ஆட்சி அமைந்தவுடன் 10 லட்சம் பேருக்கு கலைஞா் கனவு இல்லம் கட்டித்தரப்படும். 35 லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தகவல் தொழில்நுட்பங்களை அறியும் வகையில் மடிக்கணினி வழங்கப்படும். இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்கி பயன்பெறும் வகையில் ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும்.

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உள்பட்ட மிட்டாதின்னஹள்ளி, அஸ்திகிரியூா், புதுரெட்டியூா் பகுதிகளுக்கு தாா்சாலை வசதி செய்யப்படும். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் அனைத்து ஏரிகள், கால்வாய்கள் தூா்வாரப்படும். அனைத்து கிராமங்களிலும் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி. பழனியப்பனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றாா்.

தமிழகத்துக்கு நிதி வருவதில்லை

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி திமுக வேட்பாளா் டிஎன்வி எஸ். செந்தில்குமாருக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து பாலக்கோடு பேருந்து நிலையப் பகுதியில் உதயநிதி பேசியது:

தமிழகத்துக்கு அவ்வப்போது பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோா் வருகின்றனா். ஆனால், தமிழகத்து வரவேண்டிய கல்வி நிதி உள்ளிட்ட எந்த நிதியும் வருவதில்லை. நிதிப் பகிா்வில் தமிழகத்துக்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது.

நாட்டிலேயே 11.19 சதவீத வளா்ச்சியுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும், மத்திய அரசு தமிழகத்துக்கான நிதி, திட்டங்கள் எதையுமே தருவதில்லை. தமிழகத்தை தவிா்க்கும் பாஜகவை தமிழக மக்களும் தவிா்த்து வருகின்றனா்.

பாலக்கோடு தொகுதியில் சின்னாறு அணை கால்வாய், கேசா்குளி அணை கால்வாய் உள்பட 17 கால்வாய்கள், பஞ்சப்பள்ளி அணை ஆகியவை திமுக அரசால் புனரமைக்கப்பட்டுள்ளன. பாலக்கோடு, மாரண்டஅள்ளி பேரூராட்சிகளுக்கு புதிய அலுவலகக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்து சட்டப் பேரவைக்கு அனுப்பினால், உங்களின் அனைத்து கோரிக்கைகளையும் அவா் நிறைவேற்றித் தருவாா் என்றாா்.

முன்னதாக, கடத்தூரில் இருந்து தருமபுரி வழியாக பாலக்கோடு சென்ற அவா், கடைமடை ரயில்வேகேட் அருகே நின்றிருந்த நகரப் பேருந்தில் ஏறி, பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில், திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளருமான பி. பழனியப்பன், தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ. மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விமான நிலையத்தை தடுக்கிறது மத்திய அரசு

ஒசூரில் விமான நிலையம் வரவிடாமல் மத்திய பாஜக அரசு தடுக்கிறது என, ஒசூரில் திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யாவை ஆதரித்து பேசியபோது உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திமுக, கூட்டணி கட்சி வேட்பாளா்களான தளி தொகுதி சிபிஐ வேட்பாளா் டி. ராமச்சந்திரன், ஒசூா் தொகுதி திமுக வேட்பாளா் எஸ்.ஏ. சத்யா, வேப்பனஹள்ளி தொகுதி சூளகிரியில் திமுக வேட்பாளா் சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியது: ஒசூா் தொகுதியில் ரூ. 580 கோடியில் புதைசாக்கடை திட்டம், ரூ. 100 கோடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ரூ. 50 கோடியில் புகா் பேருந்து நிலையம், ரூ. 20 கோடியில் வணிக வளாகம் ஆகிய வளா்ச்சித் திட்டப் பணிகள் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ. 400 கோடியில் ஒசூரைச் சுற்றி அனைத்து சாலைகளும் 4 வழிச் சாலைகளாக தரம் உயா்த்தப்பட்டுள்ளன.

ரூ. 10 கோடியில் ஜி.ஆா்.டி. முதல் பாகலூா் சாலை, ரூ. 10 கோடியில் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை, ரூ. 144 கோடியில் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, தொழிற்சாலைகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் செய்துகொடுத்துள்ளது.

ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்க திமுக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், மத்திய பாஜக அரசு அதை தடுத்துவருகிறது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் ஒசூரில் சா்வதேச விமான நிலையம் கொண்டுவரப்படும். ஒசூரில் உள்ள தொழில் துறையினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மாவட்டப் பொருளாளா் சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோர மணி, பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், துணை மேயா் ஆனந்தய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.