முகப்பு
தமிழ்நாடு

திமுகவை நம்பினால் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூரில் இபிஎஸ் பேச்சு

மயிலாப்பூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு...

Updated On : 25 மார்ச், 2026 at 1:03 PM
மயிலாப்பூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு... - ADMK
பகிர்:

திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளதாகவும் அதிமுக கூட்டணித் தலைவர்கள் சுதந்திரமாக உள்ளதாகவும் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளரும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்தார். இதையடுத்து மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மந்தைவெளி புனிதமேரி சாலையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடையே முதல் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

அப்போது இபிஎஸ், "நான் ஏற்கனவே 193 தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளைச் சேகரித்தேன். அது மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முதலாக மயிலாப்பூரில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. இறைவன் அருளால் அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி 210 இடங்களில் வென்று, அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்.

திமுகவின் நிலை இன்று பரிதாபமாக உள்ளது. நமது கூட்டணிக் கட்சிகளை மூன்று நாள்களுக்கு முன்பு நமது கட்சி அலுவலகத்திற்கு அழைத்தோம். அங்கு கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை அறிவித்தோம். அடுத்த நாள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நம் தேர்தல் அறிக்கை மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதால் அனைத்து மக்களும் நமக்கு பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

அதேபோல் அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த தொகுதியில் எந்தெந்தக் கட்சி போட்டியிடும் என்று பேசி முடிவெடுத்து இன்று அறிவித்துவிட்டோம். அதுமட்டுமல்ல, அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருக்கிறோம். இதை முதன்முதலில் அறிவித்தது அதிமுகதான். 23 வேட்பாளர் அடங்கிய பட்டியலை அறிவித்தோம், இன்னும் ஓரிரு நாள்களில் மீதமும் அறிவிக்கப்படும்.

ஆனால், திமுகவின் நிலை என்ன? திமுக கூட்டணி அமைப்பதற்கு 20 நாள்களாகப் போராடினார்கள். ஒவ்வொரு கட்சியும் பதறிக் கொண்டிருக்கிறது. அவர்கள் போராடியே தொகுதி பெறும் அவல நிலை உள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் அடிமையாக உள்ளனர். ஆனால், அதிமுக கூட்டணித் தலைவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

திமுகவில் 10 ஆண்டுகாலம் பயணிக்கிறோம் என்கிறார்கள். அதாவது, 10 ஆண்டுகள் அடிமையாக இருக்கிறார்கள். அதனால் தான் 2021 தேர்தலைவிட குறைவான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள். இதை திமுக கூட்டணிக் கட்சியினர் எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது திமுகவிடம் ஆட்சி இருக்கும்போது, அவர்களை புகழ்ந்து பாட உங்களை பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் தேர்தலில் உங்களுக்குத் தகுந்த அந்தஸ்து கொடுக்காத கட்சி திமுக.

கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராடிப் பார்த்தார்கள், நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டிப் பார்த்தார்கள். ஆனால் கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதி பெற்றுள்ளனர். விசிகவும் எவ்வளவோ போராடி 8 இடங்களை மட்டுமே பெற்றனர். அங்கீகாரம் இல்லாத கட்சிகளுக்கு அதிகம் இடம், அங்கீகரிக்கப்பட்ட விசிகவுக்கு குறைந்த தொகுதி. இனியாவது உணர்ந்துகொள்ளுங்கள், திமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள். அதிமுக கூட்டணியில் கட்சிகளுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது.

5 ஆண்டு காலம் திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன செய்தார்கள்? துன்பம்தான் மிஞ்சியது. திமுக என்றால் குடும்பக் கட்சி, வாரிசு அரசியல். எம்ஜிஆர் தீயசக்தி திமுகவை அழிக்க அதிமுகவை தோற்றுவித்தார். எம்ஜிஆர் ஆட்சியில் மக்களுக்கு பல திட்டங்களை கொண்டுவந்து ஏழை, எளிய மக்கள் ஏற்றம் பெற்றனர். புரட்சித்தலைவர் ஆட்சி, ஜெயலலிதா ஆட்சியும் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. அந்த இருவர் பாதையில்தான் அதிமுக பயணிக்கிறது.

ஜெயலலிதா, மக்களுக்கு எத்தனையோ திட்டம் கொண்டுவந்தார். 5 ஆண்டு திமுக ஆட்சியில் சென்னை மக்களுக்கு என்ன செய்தார்கள்? துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. அதிமுக திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறார்கள். மழைநீர் வடிகால் வசதி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. 2400 கிலோமீட்டர் வடிகால் வசதி செய்துதரப்பட்டது. அதில் நான்கு பிரிவாக ஃபேஸ் 1 ஃபேஸ் 2 அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. ஃபேஸ் 3 மற்றும் 4 திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டது, இன்னும் முடிக்கவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் அவர்களும் நகர்ப்பற வளர்ச்சி அமைச்சர் மற்றும் சென்னை அமைச்சர்கள், மேயர் என எல்லோரும் மழைக்காலத்தில் ஒரு சொட்டு தண்ணீர்கூட தேங்காது என்றனர். மழைநீர் வடிகால் அதிமுக ஆட்சியின் திட்டம், அதைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. 98% நிறைவேற்றப்பட்டதாக பச்சைப்பொய் சொன்னார்கள். தண்ணீர் தேங்காது என்றனர், ஆனால் நிலைமை என்ன..? இதுவரை பிரச்னை முடியவில்லை.

அதிமுக ஆட்சியில் தான் பிரமாண்ட திட்டங்கள் வந்தன. மெட்ரோ ரயில் கட்டம் 2, ஒரே திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றோம். இந்தியாவில் வேறு எங்கும் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மத்திய அரசை இணக்கமாக அணுகி சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஜெயலலிதா திட்டமிட்டார், துரதிர்ஷ்டவசமாக ஜெயலலிதா மறைந்துவிட்டார். அதன்பின்னர் ஜெயலலிதா அரசு 118 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்க அனுமதி பெற்றது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவழைத்து அடிக்கல் நாட்டியது அதிமுக அரசு. அது முழுமையாக நிறைவேறும்போது போக்குவரத்து நெரிசல் இருக்காது. இது அதிமுகவின் சாதனை.

இப்படி ஏதாவது பெரிய திட்டம் திமுக கொடுத்ததா? எப்போது பார்த்தாலும் கொள்ளை அடிப்பதுதான் குறிக்கோள். கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதுதான் அவர்களின் தாரக மந்திரம், இதைத்தான் 5 ஆண்டுகளாகச் செய்தார்கள்.

அதிமுக ஆட்சி இருக்கும்போது புயல் வந்தது, மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டது. வர்தா புயலால் சென்னையில் மரங்கள் சாய்ந்தன, மின்கம்பங்கள் உடந்தன, அப்படியும் அதிமுக அரசு விரைந்து செயல்பட்டு ஓரிரு நாள்களில் மின் தடையை சரிசெய்து இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வந்தோம். 2 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பபட்டன. மக்கள் பிரச்னையை தீர்க்கும் வல்லமை படைத்த அரசாக அதிமுக அரசு இருந்தது.

ஓராண்டுக்கு முன்பு சென்னையில் சாதாரண மழை பொழிந்தது, எல்லா ஏரியாவிலும் தண்ணீர் தேங்கியது. அப்போது ஒரு பெண்மணி, ‘ஸ்டாலின் தான் வந்தாரு… நீச்சலடிக்க விட்டார்’ என்று கூறினார். அப்படிப்பட்ட நிலைதான் இருந்தது. ஸ்டாலின் ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மருமகன் சபரீசன், மனைவி துர்கா என்று நான்கு அதிகார மையங்கள் உள்ளன. இந்த நான்கு அதிகார மையத்துக்கும் முடிவுகட்டும் தேர்தல் வரக்கூடிய தேர்தல்.

கரோனா காலம் கடுமையான சோதனை காலம். அப்படி ஒரு நோயை யாரும் பார்த்ததில்லை, உலகமே ஸ்தம்பித்தது. தமிழகத்திலும் நோய் கடுமையாக இருந்தது. ஒருவரைத் தாக்கிய அறிகுறி தெரியாத காலகட்டம். நம் அரசு திறமையாக செயல்பட்டு தக்க சிகிச்சை அளித்து விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்றியது. உலகளவில் கரோனாவை தடுத்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். பிரதமர் மோடி அனைத்து முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தை காணொலிக் காட்சியில் நடத்தினார். அப்போது முதல் மாநிலமாகத் திகழும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்கள் பின்பற்ற வேண்டும் என்றார்.

அந்த காலகட்டத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை, உணவு இல்லை. ஏழை மக்கள் பாதிக்கக் கூடாது என்பதால் அம்மா உணவகத்தில் உணவுகள் தயாரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 7 லட்சம் பேருக்கு உணவு வழங்கினோம். 11 மாதம் விலையில்லாமல் உணவு வழங்கினோம். மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்களுக்கு வீட்டுக்கே சென்று 3 வேளையும் உணவு கொடுத்தோம். அதேபோல, வேலைவாய்ப்பு இல்லை, ஏழைகளுக்காக 11 மாதம் ரேஷன் கடையில் விலையில்லாமல் உணவுப்பொருள்கள் கொடுத்தோம்.

11 மாதம் அரசுக்கு வருவாய் இல்லை, டாஸ்மாக், பத்திரப்பதிவு, ஜிஎஸ்டி எதிலும் வருவாய் இல்லை, அப்போதுகூட சிறப்பான ஆட்சி கொடுத்தோம். அந்த காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கவில்லை, மாணவர்கள் மன உளைச்சலில் இருந்தனர். அதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். கல்லூரி மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதினார்கள். இளைஞர்கள், மாணவர்களையும் காப்பாற்றியது அதிமுக அரசு. இப்படி ஏதாவது ஒரு திட்டம் இந்த ஆட்சியில் பார்க்க முடிகிறதா?

திமுக 525 வாக்குறுதிகள் கொடுத்தது. அதில் நான்கில் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை. ஆனால் ஸ்டாலினும் அமைச்சர்களும் எப்போது பார்த்தாலும் 98% நிறைவேற்றப்பட்டதாக பொய் சொல்கிறார்கள். கல்விக் கடன் ரத்து செய்தார்களா? நீட் தேர்வு ரத்து செய்தார்களா? ரகசியம் இருக்கிறது என்று உதயநிதி சொன்னார். ரகசியத்தை முதல்வர் சொல்லிவிட்டார், அதாவது நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்துவிட்டதால் எங்களால் விலக்கு பெறமுடியாது என்று ரகசியத்தை ஸ்டாலின் உடைத்துவிட்டார். வீதி வீதியாக ஸ்டாலினும் உதயநிதியும் பேசி மக்களை, பெற்றோரை, மாணவர்களை ஏமாற்றினார்கள்.

நான் இந்த வீதியில் பார்த்தேன், எல்லோரும் சாதாரண மக்கள். நான் கிராமத்தில் வாழ்ந்தவன். ஏழைகளின் கஷ்டத்தை அறிந்தவன். அந்த அடிப்படையில் எங்கள் ஆட்சி நடந்தது. இன்றைய ஆட்சியில் செல்வந்தர்களுக்குத் தான் முதலிடம், புகலிடம்.

அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்காக திட்டம் போட்டோம். திமுக ஆட்சியில் அவர்கள் குடும்பத்துக்காக திட்டம் போட்டனர். சொத்து வரி உயத்தப்படாது என்று சொல்லிவிட்டு, உயர்த்திவிட்டனர், வீட்டு வரி 100% உயர்வு. கடை வரி 150% உயர்வு. ஆண்டுக்கு 6% வரி உயர்வு. மின்கட்டணம் 52% உயர்வு ஆண்டுக்கு 5% உயர்வு. இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சி தேவையா? மக்கள் எப்படி பிழைப்பார்கள்?

சிறுகுறு நடுத்தர தொழில் செய்யமுடியவில்லை. ஜெயலலிதா வழி ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் கட்டிட அப்ரூவல் வாங்க ஆயிரம் சதுர அடிக்கு கழிவுநீர் டெபாசிட் உட்பட 37,500 ரூபாய் மட்டும் தான். ஆனால் திமுக ஆட்சியில் 1 லட்சத்து 8 ஆயிரம். 108% உயர்வு.

சென்னை மக்கள் அன்றாடம் வேலை செல்பவர்கள், மாதச்சம்பளம் வாங்குகின்றனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 40 ரூபாய் திமுக ஆட்சியில் 75 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய், திமுக ஆட்சியில் 75 ரூபாய், இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய், திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய், திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய், திமுக ஆட்சியில் 500 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய், திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய், திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு பற்றி அரசுக்கு கவலையில்லை.

அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது, விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வைக்கப்பட்டது. அதன்மூலம், விலைவாசி உயரும் சமயங்களில் அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. ஏழை மக்களை பாதுகாத்தோம்.

திமுக அரசு இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதலிடம். கடன் வாங்குவதில் சூப்பர் முதல்வர். 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டார்கள். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான். கொரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஆனால்,. திமுகவுக்கு அப்படிப்பட்ட நிலைமை இல்லை. திமுக அரசுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் கோடி வருவாய் வந்தது. ஒருபக்கம் வருவாய், இன்னொரு பக்கம் திட்டம் இல்லை, ஆனால் கடன் வாங்குகின்றனர், இதற்கு காரணம் ஊழல். 5 லட்சம் கோடி கடன் வாங்கினால், எப்படி மக்களால் திருப்பிக் கட்ட முடியும்? கடன் வாங்கும் அரசு தொடர வேண்டுமா?

எவ்வளவோ பிரச்னைகள். அதைப் பற்றி கவலையில்லாமல் கார் பந்தயம் நடத்துகிறார். யாருடைய பணம்..? மக்கள் வரிப்பணம். ஸ்டாலினோ அவர் தந்தைக்கு பேனா வைக்கிறார். நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் டிரஸ்டில் 8 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது அதில் பேனா வையுங்கள். மக்கள் வரிப்பணத்தில் எழுதாத பேனாவை நடுக்கடலில் வைப்பது நியாயமா? அடக்கம் செய்த நினைவிடத்தில் வையுங்கள். மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் அரசு தொடர வேண்டுமா?

எல்லாவற்றுக்கும் மேலாக உடல் உறுப்பை கொள்ளை அடிக்கிறார்கள். திமுக எம்.எல்.ஏ. திருடுகிறார். நாமக்கல்லில் வறுமை காரணமாக ஏழை தொழிலாளிகளிடம் முறைகேடாக திருடினார்கள். திமுக கட்சிக்காரர்களின் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால் மீண்டும் ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். குமாரபாளையத்தில் பெண் கிட்னியை எடுக்க அழைத்துச்சென்று, கல்லீரலை எடுத்துவிட்டனர். எம்.எல்.ஏ. மருத்துவமனையில் முறைகேடு நடந்ததாக அரசு ஒப்புக்கொண்டும் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

கஞ்சா எல்லா இடத்திலும் கிடைக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழியக் காரணமே போதைதான். நான் சட்டமன்றத்தில் முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்தேன், போதை பொருள் பல்வேறு வடிவில் விற்கிறது என்று சொல்லியும் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. பேட்டி அறிக்கை கொடுத்தேன் எதுவும் நடக்கவில்லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. தமிழகத்தில் போதையைக் கட்டுப்படுத்த திராணியற்ற அரசு தொடர வேண்டுமா? நாடு செழிக்க வேண்டுமென்றால் சட்டம் -ஒழுங்கு சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகம் சீரழிகிறது என்றால் இதற்கு காரணம் கையாலாகாத முதல்வர் ஆள்கிறார். எனவே, இந்த குற்றங்களை எல்லா தடுப்பதற்கு அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும்.

இன்று சென்னையில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன. பட்டப்பகலில் அரசியல் கட்சித் தலைவர் வெட்டிச் சாய்க்கப்படுகிறார், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை, திருநெல்வேலியில் காங்கிரஸ் தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார், கொலையாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. தினமும் கொலை நடக்கிறது. நாங்குநேரியில் போதை ஆசாமிகள் வெட்டி சாய்க்கிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண் பிள்ளைகள் வெளியில் சென்று வீடு திரும்பினால்தான் உண்டு. சிறுமிகள் முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. அத்தனை மோசமான ஆட்சி.

அண்மையில் பல்வேறு சம்பவங்கள், விளாத்திக்குளத்தில் பள்ளி மாணவி வீடு திரும்பவில்லை, பாலியல் துன்புறுத்தி கொலை செய்தனர். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை. யார் அந்த சார்? இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அதிமுக ஆட்சி வந்தால் கண்டுபிடிக்கப்படும். மதுராந்தகத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கடத்திச்சென்று பாலியல் சீண்டல், கோவை விமான நிலையம் அருகில் பெண்மணிக்கு பாலியல் வன்கொடுமை. இப்படி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. 6,999 போக்சோ வழக்குகள் பதிவு என்றால் சிறுமிகளுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்று எண்ணிப்பாருங்கள். இரண்டரை வயது குழந்தைக்கு பாலியல் சீண்டல். இப்படிப்பட்ட மோசமான அரசை ஓட ஓட விரட்டி தேர்தல் நேரத்தில் வெற்றிக்கொடி நாட்டுவோம்.

இந்த தொகுதி நமது கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். சென்னை மாநகரத்தில் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமக போட்டியிட்டால் மாம்பழம் சின்னத்திலும், அமமுக வேட்பாளர் போட்டியிட்டால் குக்கர் சின்னத்திலும் வாக்களியுங்கள். அவர்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகர பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.

பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு, 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளிதோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். ஸ்டாலின் மாடல் அரசு ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்…’’ என்று பேசினார்.

summary

Edappadi Palaniswami speaks against dmk govt at Mylapore campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.