முகப்பு
மதுரை

சித்திரைத் திருவிழா: மதுரையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 4:45 AM
சித்திரைத் திருவிழா கொடியேற்றம் - கோப்புப் படம்
பகிர்:

மதுரையில் நடைபெற்றும் வரும் சித்திரைத் திருவிழாவையொட்டி, திங்கள், செவ்வாய் (ஏப். 27, 28) ஆகிய இரு நாள்கள் தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக மீனாட்சி அம்மன் திக் விஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை திங்கள்கிழமை (ஏப். 27) முதல் புதன்கிழமை வரை நடைபெறவுள்ளன. இதைக் காண மதுரை, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் வருவதை முன்னிட்டு, தற்காலிகப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதன்படி, திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வரை நான்கு ஆவணி மூல வீதிகளில் சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. திக் விஜயம் நிகழ்ச்சியின்போது மாசி வீதிகள், கீழ மாசி வீதியில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லலாம். மேலும், நான்கு ஆவணி மூல வீதிகளில் திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.

தேரோட்டத்தின்போது மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளிலும் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை தேரோட்டம் முடியும் வரை இரு சக்கர வானங்கள் உள்ளிட்ட எந்த வாகனத்துக்கும் அனுமதி இல்லை. மேலும், புதன்கிழமை பகல் முழுவதும் கீழ மாசி வீதி, கீழ மாரட் வீதியில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

மீனாட்சி - சுந்தரேசுவரா் திருக்கல்யாண வைபவத்தின் போது திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. அனுமதிச் சீட்டுடன் வரும் வாகனங்கள் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மேல ஆவணி மூல வீதி, வடக்கு ஆவணி மூல வீதி, தெற்கு ஆவணி மூல வீதி பகுதிகளில் ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தங்களில் நிறுத்திக் கொள்ளலாம். அனுமதிச் சீட்டு இல்லாத காா், இரு சக்கர வாகன உரிமையாளா்கள் தங்களது வாகனங்களை கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் நிறுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.