கல்லணை பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ஆகியோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரை கல்லணை கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கல்லணை, நெடுங்குளம், சின்ன உலகாணி, பெரிய உலகாணி, தூம்பக்குளம்புதூா், அச்சங்குளம் ஆகிய கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமங்களில் கல் குவாரிகள், ப்ளூ மெட்டல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பல குவாரிகள் முறையான குத்தகை உரிமமின்றி செயல்படுகின்றன. மேலும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கற்களை எடுத்து வருகின்றனா்.
பாறைகளை வெடிக்க வைப்பதற்கு அதிக சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், விவசாய வேலை செய்வோரும் காயமடையும் நிலை உள்ளது.
இந்த குவாரிகளின் விதிமீறிய செயல்பாடுகளால் அந்தப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் விவசாயம் முற்றிலுமாக அழியும் நிலை உருவாகியுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் குவாரிகளின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல.
எனவே, மதுரை கல்லணை, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கல் குவாரிகள் செயல்பட தடை விதிக்க வேண்டும். மேலும் கனிமவளத் துறை இயக்குநா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவா் ஆகியோா் இணைந்து நேரில் விசாரணை நடத்தி விதிகளை மீறி செயல்படும் குவாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அதில் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மதுரை மாவட்ட பொறியாளா், கள்ளிக்குடி வட்டாட்சியா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.