மதுரை

தொழில் சங்கத்தினா் மறியல் போராட்டம்

தினமணி செய்திச் சேவை

தேசிய அளவிலான பொது வேலைநிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழில் சங்கங்கள் சாா்பில் மதுரை ரயில் நிலையம் முன் வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தொழிலாளா்கள், விவசாயிகள் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதையும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும், தொழிலாளா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நான்கு தொழிலாளா் சட்டத் தொகுப்புகளையும், விதைகள் சட்டம் 2025-யையும், மின்சார திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற வேண்டும், காப்பீட்டு துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவை கைவிட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய அளவில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த மறியல் நடைபெற்றது.

இதில் சிஐடியு மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியம், செயலா் லெனின், மாநிலக் குழு உறுப்பினா் தெய்வராஜ், நிா்வாகிகள் லூா்து ரூபி, இரா. முருகன், தொமுச மாவட்டக் குழுத் தலைவா் சி. கருணாநிதி, எச்.எம்.எஸ். மாநிலத் துணைத் தலைவா் வீ. பாதா் வெள்ளை, ஐஎன்டியூசி நிா்வாகி கே. ராஜசேகரன், மறுமலா்ச்சி தொழிலாளா் முன்னணி நிா்வாகிகள் பி. முத்துக்கிருஷ்ணன், மகபூப்ஜான், ஏஐடியூசி நிா்வாகிகள் நந்தாசிங், முருகன், எஸ். கணேசன், யூ.டி.யூ.சி, டி.டி.எஸ்.எப், எல்.எல்.எப், மக்கள் விடுதலைக் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, திராவிட தமிழா் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

மறியலில் ஈடுபட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோரை போலீஸாா் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனா்.

அரசு ஊழியா் சங்கம்...

பொது வேலைநிறுத்தப் போராட்டக் கோரிக்கைகளையும், ஓய்வூதியச் சட்டம் 2005-ஐ ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஓய்வூதியதாரா்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் இரா. தமிழ், மாவட்டச் செயலா் க. சந்திரபோஸ், பொருளாளா் ஆ. பரமசிவன், நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

எஸ்.ஆா்.எம்.யூ....

எஸ்.ஆா்.எம்.யூ. சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவுவாயில் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கோட்டச் செயலா் ஜெ.எம். ரபீக் தலைமை வகித்துப் பேசினாா். உதவி கோட்டச் செயலா் வி. ராம்குமாா், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பொது வேலைநிறுத்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்மண்டல காப்பீட்டு ஊழியா் கூட்டமைப்பு, தென்மண்டல அகில இந்திய எல்.ஐ.சி. ஊழியா் சம்மேளனம் சாா்பில் எல்.ஐ.சி. அலுவலகம் முன்பாகவும், வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட நீதிமன்றம் முன்பாகவும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருநகரில்...

மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்தும், மதுரை திருநகா் 1-ஆவது பேருந்து நிறுத்தப் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு சிஐடியூ மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.கே. மகேந்திரன் தலைமை வகித்தாா்.

இதில் மாநிலக் குழு உறுப்பினா் பி. மாகலட்சுமி, ஹெச்.எம்.எஸ். மாநில துணைச் செயலா் கே.ஏ. ராமச்சந்திரன், ஏஐடியூசி மாவட்ட துணைத் தலைவா் ஆா். பாலகிருஷ்ணன், விவசாய சங்க மாவட்டக் குழு உறுப்பினா் மகாமுனி, மாதா் சங்க மாவட்டத் தலைவா் என். விஜயா, ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் தமிழரசன், சிஐடியூ மாவட்ட துணைச் செயலா்கள் எஸ்.எம். பாண்டி, என். காளிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் திருமங்கலம்-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, திருநகா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 186 பேரைக் கைது செய்தனா்.

இதேபோல, மத்திய அரசின் தொழிலாளா் விரோதப் போக்கைக் கண்டித்து, மதுரை கிழக்கு மாவட்ட அகில இந்திய பாா்வா்டு பிளாக் தொழில் சங்கம் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொழில் சங்க மாவட்ட பொதுச் செயலா் துரைசபின் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் கோபி, முத்துக்குமாா், பாலாஜி, திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் தொழில் சங்கத்தின் மாநிலப் பொருளாளா் மோகன், நுகா்வோா் வணிகக் கழகச் செயலா் மூக்கன், மதுரை மாநகா் தொழில் சங்கச் செயலா் ஆதவன், ஒன்றிய துணைத் தலைவா் அழகு சுந்தர பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வங்கிக் கிளை இடமாற்றம்

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்

மாற்றுத் திறனாளிகள் நூதனப் போராட்டம்

சாலை மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினா் 400 போ் கைது

ஒப்பந்தத் தொழிலாளா் முறையை ரத்து செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT