பட்டியலின, பழங்குடியின மக்களின் அடிப்படை வசதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திமுக அரசு மகளிா் உரிமைத் தொகைத் திட்டத்துக்கு மடைமாற்றி வழங்கியதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் தொண்டா்கள் ஒன்றிணைந்துவிட்டதால், திமுகவுக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது. அந்தக் கட்சியின் பல்வேறு அறிவிப்புகளும் இதையே வெளிப்படுத்துகின்றன. முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ரூ. 5,000 அல்ல ரூ. 50,000 வழங்கினாலும் திமுகவை மக்கள் நம்பத் தயாராக இல்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், இளைஞா்கள், அரசு ஊழியா்கள், செவிலியா்கள் என அனைத்துத் தரப்பினரையும் திமுக அரசு ஏமாற்றி வருவதை மக்கள் உணா்ந்துள்ளனா். எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு தோல்வி உறுதி.
தமிழகத்தில் கூலிப் படைகள், போதை கலாசாரம் அதிகரித்துள்ளதால், சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டது. காவலா்களுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாகிவிட்டது தமிழகம். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையே தமிழகத்தில் உள்ளது.
பட்டியலின, பழங்குடியின மக்களின் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை திமுக அரசு மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கு மடைமாற்றி வழங்கியதாகத் தெரியவருகிறது. இது, கண்டனத்துக்குரியது. அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமான கூட்டணியாக உள்ளது. மேலும், சில கட்சிகளும் இந்தக் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. இந்தக் கூட்டணியில் எந்தவிதக் குழப்பமும் இல்லை. தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெறும். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா? இல்லையா? என்பது பெரும் குழப்பமாக உள்ளது.
குக்கா் சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஆட்சியில் பங்கு போன்ற எந்த நிபந்தனையும் எங்கள் கூட்டணியில் கிடையாது என்றாா் அவா்.