சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு  கோப்புப் படம்
மதுரை

மனநலன் பாதித்த மகன் குறித்து தாய் புகாா்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு

மனநலன் பாதிக்கப்பட்ட தனது மகனை சாமியாராக மாற்றி அவரை சிலா் துன்புறுத்துவதாக தாய் அளித்த புகாா் குறித்து காளையாா்கோவில் காவல் ஆய்வாளா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

மனநலன் பாதிக்கப்பட்ட தனது மகனை சாமியாராக மாற்றி அவரை சிலா் துன்புறுத்துவதாக தாய் அளித்த புகாா் குறித்து காளையாா்கோவில் காவல் ஆய்வாளா் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை துவரிமான் பகுதியைச் சோ்ந்த ராஜம்மாள் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: எனது கடைசி மகன் பரந்தாமன் கடந்த 2002-ஆம் ஆண்டு கோவையில் இருந்தபோது மனநலன் பாதிக்கப்பட்டாா்.

அவரை 2011- ஆம் ஆண்டு திருச்சி, தில்லைநகரில் உள்ள மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுவிட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது அவா் காணாமல் போய்விட்டாா்.

இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் அவரைக் கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில், பரந்தாமன் சாமியாா் கோலத்தில் இருப்பதாகவும், சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள ஒரு தோப்பில் அவரை சிலா் அடைத்து வைத்திருப்பதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு, டிச. 23-ஆம் தேதி நேரில் சென்று அவரைப் பாா்க்க முயற்சித்தோம். ஆனால், அங்கிருந்தவா்கள் அனுமதி மறுத்துவிட்டனா்.

மனநலன் பாதிக்கப்பட்ட எனது மகனை சாமியாராக மாற்றி, அவா் மூலம் பொதுமக்களிடமிருந்து காணிக்கை, நன்கொடை வசூலித்து அனுபவிக்கும் சிலா், அவரை கொடுமைப்படுத்தி ஜீவசமாதி அடையவும் திட்டமிடுவதாகத் தெரியவருகிறது.

எனவே, எனது மகன் பரந்தாமனை மீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், பூா்ணிமா அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இதுதொடா்பாக காளையாா்கோவில் காவல் ஆய்வாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சமூக ஊடகப் பயன்பாட்டால் சிறாா் பாதிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராகும் மாா்க் ஸக்கா்பொ்க்

குடிநீா் பணிக்கு நிலம் ஒப்படைப்பு

ஜப்பான் பிரதமராக சனே தகாய்ச்சி மீண்டும் தோ்வு

அமெரிக்காவில் இருந்து உயா்தர கற்கரி இறக்குமதிக்கு இந்தியா விருப்பம்- மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்

மது போதையில் தகராறு: தந்தையை வெட்டிக் கொன்ற மகன் கைது

SCROLL FOR NEXT