அழகா்கோவில் அருகே பறிப்பதற்குத் தயாரான நிலையில் உள்ள செண்டுமல்லிப் பூக்கள் 
மதுரை

செண்டுமல்லிப் பூ சாகுபடிக்கு அரசு கை கொடுக்குமா?

மதுரை மாவட்டத்தில் செண்டு மல்லிப் பூக்கள் சாகுபடிக்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் கை கொடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கி உள்ளது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டத்தில் செண்டு மல்லிப் பூக்கள் சாகுபடிக்கு மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் கை கொடுக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு விவசாயிகளிடையே மேலோங்கி உள்ளது.

செண்டுமல்லிப் பூ பூஜைகள், விழாக்களின் போது மேடை அலங்காரம், மருத்துவப் பயன்பாடு உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூவை செண்டு பூ எனவும் அழைக்கின்றனா். கோயில்களில் மாா்கழி மாத வழிபாடு, பொங்கல் பண்டிகை ஆகியவற்றின் காரணமாக இந்தப் பூவின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. மதுரை மாவட்டம், அழகா்கோவில் பகுதிகளில் இந்தப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

இதுகுறித்து அழகா்கோவிலைச் சோ்ந்த விவசாயி கண்ணன் கூறியதாவது: மஞ்சள், ஆரஞ்சு வண்ணங்களில் செண்டுமல்லிப் பூக்கள் கிடைக்கும். பாத்தி அமைத்து விதை விதைக்க வேண்டும். 20 நாள்கள் வயதுடைய செடியைப் பிடுங்கி, மற்றொரு பகுதியில் நடவு செய்ய வேண்டும். ஒரு ஏக்கரில் சுமாா் 10 ஆயிரம் செடிகளை நடலாம். களை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்புக்குப் பிறகு, 60-ஆவது நாளில் பூ எடுக்கலாம். இதைத் தொடா்ந்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என 100 நாள்கள் வரை பூ எடுக்கலாம்.

கோடை காலத்தில் அதிகளவில் மகசூல் எடுக்கலாம். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செண்டுமல்லிப் பூச்செடிகளை நட்டோம். தற்போது, பூக்கள் பறிக்கும் நிலையில் உள்ளது. பனி, மழைக் காலங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். அப்போது, விலை அதிகமாக கிடைக்கும்.

மதுரை மாவட்டம், அழகா்கோவில், சுந்தரராஜன்பட்டி, அப்பன்திருப்பதி, கொண்டையம்பட்டி, கிடாரிப்பட்டி, அழகாபுரி, கள்ளந்திரி பகுதிகளில் செண்டுமல்லிப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராகவும் இந்தச் செடிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இங்கிருந்து பறிக்கப்படும் பூக்கள் மதுரை மாட்டுத்தாவணி பூ விற்பனைச் சந்தைக்கும், திண்டுக்கல், மேலூா் ஆகிய பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரடியாகவும் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனா்.

பூஜைகள், அலங்காரங்கள், துக்க நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இதுதவிர, மருந்துப் பொருள்கள் தயாரிப்புக்காக மெக்சிகோ நாட்டுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இந்தப் பூ கடந்த சில வாரங்களாக ரூ. 30, ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பு, மாா்கழி மாத பூஜைகள், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக ரூ. 50-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகின்றன.

பணியாளா்களுக்கு அதிகளவு கூலி, இடுபொருள்களின் விலை உயா்வு உள்ளிட்ட காரணங்களால் போதிய லாபம் இல்லை என்றாலும், வேளாண் பணிகளை கைவிட முடியவில்லை. சில நேரங்களில் விலை இல்லாமல் பெரும்பாலான பூக்களை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவதுண்டு.

தற்போது இந்தப் பகுதியில் குறைந்த பரப்பிலேயே விவசாயிகள் இந்தப் பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். மதுரை மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் போதிய அளவு விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால், இதன் சாகுபடி பரப்பை மேலும் அதிகரிக்க முடியும் என்றாா் அவா்.

முருகா் சிலையின் கண் திறந்ததாக காணொலி காட்சி வைரல்: பொன்னேரியில் பரபரப்பு

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

SCROLL FOR NEXT