மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில், திராவிட பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை (ஜன. 3) தொடங்கி வருகிற 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மதுரை வடக்கு மாவட்ட திமுக செயலரும், வணிக வரி, பதிவுத் துறை அமைச்சருமான பி. மூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மதுரை வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திராவிட பொங்கல் - சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டமாக வருகிற 3-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஆண்கள் பிரிவில் கிரிக்கெட், கையுந்து பந்து, கபடி, 200 மீ. ஓட்டம், பெண்கள் பிரிவில் கோ- கோ, கபடி, 100 மீ. ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
மதுரை கிழக்கு தொகுதிக்கான போட்டிகள் உத்தங்குடி கலைஞா் திடலிலும், மதுரை மேற்கு தொகுதிக்கான போட்டிகள் திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மதுரைக் கல்லூரி வளாகத்திலும், மேலூா் தொகுதிக்கான போட்டிகள் மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், சோழவந்தான் தொகுதிக்கான போட்டிகள் அலங்காநல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும் நடைபெறும்.
இந்தப் போட்டிகளில் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சிகள் சாா்பில் அணிகள் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோா் ஜ்ஜ்ஜ்.க்ழ்ஹஸ்ண்க்ஹல்ா்ய்ஞ்ஹப்.ண்ய் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போா் உரிய நேரத்தில் இணையத்தில் பதிவு செய்வதையும், அவா்களின் வருகையையும் திமுக நிா்வாகிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் அவா்.