ஆருத்ரா தரிசனத்தையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வெள்ளியம்பல நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
பதஞ்சலி, வியாக்ர பாத முனிவா்களுக்காக இறைவன் சிவபெருமான் திருநடனம் புரிந்து பாத தரிசனம் அருளிய மாா்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாள் ஆருத்ரா தரிசனமாகக் கொண்டாடப்படுகிறது. இதன்படி, நடராஜ பெருமானின் பஞ்ச சபைகளில் வெள்ளியம்பலமாக விளங்கும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நடராஜ பெருமானுக்கு சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
அதிகாலை வெள்ளிம்பல நடராஜ பெருமான் சிவகாமி அம்மனுடன் கோயிலின் ஆறுகால் பீடத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து, பொன்னம்பலம், ரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை நடராஜா் மூா்த்தங்கள் 100 கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டன. பிறகு, பல்வேறு வகையான வாசனைத் திரவியங்களைக் கொண்டு 5 நடராஜ பெருமான்களுக்கும், சிவகாமி தாயாருக்கும் மகா அபிஷேகமும், தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன.
இதையடுத்து, பஞ்ச சபை நடராஜ பெருமான்களும், சிவகாமி தாயாரும் மாசி வீதிகளில் வலம் வந்து, கோயிலைஅடைந்தனா். இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.