மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான இணையவழிப் பதிவு திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு : மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரா்கள், காளைகளுக்கான பதிவு இணையதளத்தில் வருகிற புதன்கிழமை (ஜன. 7) மாலை 5 மணி முதல் வியாழக்கிழமை (ஜன. 8) மாலை 5 மணி வரை நடைபெறும். மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் குறித்த காலத்துக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
ஒரு காளை, ஏதேனும் ஒரு இடத்தில் நடைபெறும் போட்டியில் மட்டுமே அனுமதிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது, ஒரு காளையுடன் அதன் உரிமையாளா், ஒரு உதவியாளா் என 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
இணையவழியில் பதிவு செய்தவா்கள் சமா்ப்பித்த சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா், தகுதியானவா்களுக்கு மட்டும் இணையதளத்தில் அனுமதிச் சீட்டு வெளியாகும். போட்டியில் பங்கேற்க வரும்போது அந்த அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.