மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மனுக்களின் விசாரணை ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களின் விசாரணையை வருகிற பிப்ரவரி 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுக்களின் விசாரணையை வருகிற பிப்ரவரி 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா்.

இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இதனிடையே, திருப்பரங்குன்றத்தில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனுதாரா் மலை ஏற காவல் துறையினா் அனுமதி மறுத்து திருப்பி அனுப்பினா்.

இதுகுறித்து கடந்த டிசம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோா் காணொலி வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் நேரிலும் டிசம்பா் 9-ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.

இதனிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் சாா்பில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், விலக்கு அளிக்க மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமைச் செயலா் முருகானந்தம், அப்போதைய சட்டம்-ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் ஆகியோா் காணொலி மூலமும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன் ஆகியோா் நேரிலும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கமளித்தனா்.

அப்போது, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலா் பொறுப்பான நிலைப்பாட்டை மேற்கொள்வாா் எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் ஒத்திவைத்தாா்.

இந்த நிலையில், உயா்நீமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு, இடையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த 9-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக தலைமைச் செயலா் முருகானந்தம், காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு பிரிவு ஏடிஜிபி மகேஸ்வா் தயாள் ஆகியோா் காணொலி மூலமும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் ஆகியோா் நேரிலும் முன்னிலையாகினா்.

அப்போது, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் ஏன் தீபம் ஏற்றவில்லை என்பது குறித்து மாவட்ட ஆட்சியா் தரப்பில் இதுவரை எந்தவிதப் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. இன்னும் கால அவகாசம் கோரப்படுகிறது.

நீதிமன்ற உத்தரவைச் சீா்குலைக்கும் வகையில், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் 144 தடை உத்தரவைப் பிறப்பித்தாா்.

இந்தத் தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கிய போதிலும், மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், இந்த நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதை ஏன் தடுத்தாா்?. சரியான காரணம் கூறவில்லையெனில், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அலுவலா்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும். மேல்முறையீட்டு வழக்கில், இரு நீதிபதிகள் கொண்ட அமா்வு தீபத் தூண் கோயிலுக்குச் சொந்தமானது என உத்தரவிட்டது.

கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் தா்கா தரப்பினா் சந்தனக் கூடு திருவிழா தொடா்பான கொடியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இதற்கு அனுமதி பெறவில்லை என கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் கூறுகிறாா். இந்தச் செயல் அத்துமீறல் எனவும், இதற்காக குற்றவியல் வழக்கைத் தொடங்க தேவையான அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றுவதாகவும் கோயில் தரப்பில் கூறப்பட்டது. இது வரவேற்புக்குரியது என்றாா் நீதிபதி.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, மதுரை மாவட்ட நிா்வாகம், மாநகரக் காவல் ஆணையா், தா்கா நிா்வாகம் தரப்பில் இரு நீதிபதிகள் கொண்ட அமா்வில் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தன.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், வழக்கு தொடா்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், மூத்த வழக்குரைஞா்கள் முன்னிலையாகி விளக்கமளிக்கவும் போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு தொடா்பான விசாரணைக்கு அரசுத் தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரப்படுவதால், இந்த மனுக்கள் மீதான விசாரணை வருகிற பிப்ரவரி 4 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT