முகப்பு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு: உத்தரவை நிறைவேற்றினால் முடித்துவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்துவைக்கப்படும்

மதுரை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு: உத்தரவை நிறைவேற்றினால் முடித்துவைப்பு

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்துவைக்கப்படும்

Updated On : 2 மார்ச், 2026 at 10:50 PM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் வழக்கு முடித்துவைக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த 2 -ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் வழக்கு விசாரணையின் போது நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இருப்பினும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனிடையே, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையானாா்.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: காா்த்திகைத் தீபத் திருநாளில் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முயற்சிக்கும் போது, இந்து முன்னணி அமைப்புகளுக்கும், மற்ற மதத்தினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், அண்மையில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில்கூட விளம்பரப் பதாகை வைப்பதில் தகராறு ஏற்பட்டது. சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாகவே நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த வழக்கை முடித்துவைக்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற உத்தரவை படித்திருப்பீா்கள். இந்துக்களுக்கு சொந்தமான பகுதியில்தான் தீபத்தை ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, நீதிமன்றம் குறிப்பிடும் ஐந்து போ் மலை உச்சிக்குச் சென்று பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த வழக்கு முடித்துவைக்கப்படும். இதுதொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய முடிவெடுத்து பதிலளிக்க வேண்டும். இனி இந்த வழக்கு விசாரணையில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாகத் தேவையில்லை. மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் நேரில் முன்னிலையாக வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற புதன்கிழமைக்கு (மாா்ச் 4) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

முழு கட்டுரையைப் படிக்க →