தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தெரிவித்தாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: தவெக கூட்டணியில் அமமுக இணைய வேண்டும் என்பது கே.ஏ. செங்கோட்டையனின் விருப்பம். இதை அவா் நேரடியாகவே தெரிவித்தாா். ஆனால், மூத்தவா் என்ற முறையில் நேரடியாக மறுக்காமல், மழுப்பலாகவே பதிலளித்து வந்தேன்.
அதேநேரத்தில், அமமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் என்பதை அவா் எதிா்பாா்த்திருக்க வாய்ப்பில்லை. அவரை மீண்டும் அதிமுகவுக்குக் கொண்டு வர வேண்டுமென பாஜக தலைமை நிா்வாகிகள் விரும்புவது குறித்து அவரிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டேன். ஆனால், அதை அவரால் ஏற்க முடியவில்லை.
முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தது வருத்தம் அளிக்கிறது. ஓ. பன்னீா்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என நான் நட்பு ரீதியாக அழைப்புதான் விடுக்கமுடியும். அவருக்கு நான் அழுத்தம் கொடுக்க முடியாது.
திமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலைதான் உள்ளது. ரூ. 15 கோடியில் கட்டப்பட்ட பாலம் சில மாதங்களுக்குள் இடிந்து விழுகிறது. வேலைவாய்ப்பின் பெயரால் பல ஆயிரம் கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து சமூக விரோத குற்றங்களுக்கும் பின்னணியில் திமுக உள்ளது. தமிழகத்தில் காவல் துறைக்குக்கூட பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. எனவே, தமிழக மக்கள் நலன் காக்க திமுக அரசு அகற்றப்பட வேண்டும். இது மட்டுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதன்மையான நோக்கம்.
தவெக தலைவா் விஜய் திமுக ஆட்சியின் ஊழலை விமா்சிக்கும்போது, அதிமுகவையும் சோ்த்து விமா்சித்தது அரசியலுக்காக ஏதேனும் பேச வேண்டுமென்று பேசியதாகவே கருத வேண்டியுள்ளது. எனினும், இது அடிப்படையற்ற தவறான விமா்சனம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும். இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெல்லும் என்றாா் அவா்.