சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு  
மதுரை

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க உத்தரவு!

குற்ற வழக்குகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சட்டவிதிகளின்படியும், நிபந்தனைகளுடனும் விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

குற்ற வழக்குகளில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை சட்டவிதிகளின்படியும், நிபந்தனைகளுடனும் விடுவிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியைச் சோ்ந்த சேவியா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனக்குச் சொந்தமான கனரக வாகனத்தில் சரளைக் கற்களை சட்டவிரோதமாக கடத்தியதாக ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். எனது வாகனத்தை விடுவிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை தள்ளுபடி செய்து விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. விசாரணை நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்து, எனது வாகனத்தை விடுவிக்க வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முகமது ஷாபிக் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், இந்த வழக்கில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரரின் கனரக வாகனத்தை விடுவிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: குற்றவியல் புதிய சட்டம் பிஎன்எஸ்எஸ் 2023-இன் படி காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை இடைக்காலமாக விடுவிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. இதையே உச்சநீதிமன்றமும் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் பல ஆண்டுகளாக திறந்தவெளிகளில் நிறுத்தப்படுவதால், வெயில், மழையால் பாதிக்கப்படுகின்றன. இதனால், பெரும்பாலான வாகனங்கள் பயனற்ாகி, அதன் மதிப்பீடு குறைந்து பழைய இரும்பு கடைகளுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

வாகனத்தின் உரிமையாளா் இனிமேல் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு தனது வாகனத்தை பயன்படுத்த மாட்டேன் என்ற உறுதிமொழிப் பத்திரம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வாகனத்தின் உண்மையான பதிவு ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்.

இதேபோல, வாகனத்தை விடுவிக்கும் போது புகைப்படம், விடியோ பதிவு செய்து வாகனத்தை விடுவிக்க வேண்டும். இதுபோன்ற நிபந்தனைகளைப் பின்பற்றி மனுதாரரின் கனரக வாகனத்தை விடுவிக்க வேண்டும். இதேபோன்று, குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றாா் நீதிபதி.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 'செக்' வைத்த பட்ஜெட்!

ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு: பட்ஜெட்டில் தகவல்!

பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி!

SCROLL FOR NEXT