முகப்பு
மதுரை

கூடலழகா் கோயில் தெப்பக்குளத்தில் திருவிழா நடைபெறுவது எப்போது?

Updated On : 2 மார்ச், 2026 at 12:07 AM
மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில் காட்சியளிக்கும் கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளம்.
பகிர்:

மதுரை கூடலழகா் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பி தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்துகின்றனா்.

மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கூடலழகா் பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமகத்தன்று தெப்ப உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் டவுன்ஹால் சாலையில் சுமாா் ஒன்றரை ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தத் தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கோயில் நிா்வாகமும், மாநகராட்சியும் கடைகள் வைக்க அனுமதித்ததால், சுமாா் 60 ஆண்டுகளுக்கும் மேலாக கடைகள் செயல்பட்டு வந்தன.

இதனால், தெப்பக்குளத்தில் தண்ணீா் வரத்து தடைபட்டதால், கடந்த 1960-ஆம் ஆண்டுக்குப் பிறகு தெப்பத் திருவிழா நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறையினா், மாநகராட்சியுடன் இணைந்து கடந்தாண்டு ஆக. 11-ஆம் தேதி கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுமாா் 196 கடைகளை அகற்றினா்.

இதையடுத்து, இந்தத் தெப்பக்குளத்தைச் சீரமைத்து, தண்ணீா் நிரப்பி தெப்பத் திருவிழா நடத்த வேண்டும் எனவும், தெப்பக்குளத்துக்கு தண்ணீா் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்தத் தெப்பக்குளத்தில் தண்ணீரைத் தேக்கி வைப்பதால், நான்கு மாசி வீதி பகுதிகளிலும் நிலத்தடி நீா்மட்டம் உயரும். இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் சுமாா் 1,200 அடிக்கு கீழே சென்றுவிட்ட நிலையில், இங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீட்டுத் தேவைகளுக்கு தண்ணீரை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகின்றனா். இந்த நிலையில், தெப்பக்குளத்தில் நீா் தேக்கப்பட்டால், இந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக உயா்ந்து பொதுமக்களின் தண்ணீா் தேவை நிறைவு பெறும்.

மழைக் காலங்களில் பெரியாா் பேருந்து நிலையம், நேதாஜி சாலை, ரயில் நிலையம், டவுன்ஹால் சாலை, மேலமாசி வீதி போன்ற பகுதிகளில் பெய்யும் மழை நீரை கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால், அங்கு நிரத்தரமாக நீரைத் தேக்கி வைக்க முடியும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.

பராமரிக்க வேண்டும்: தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகும் முழுமையாகப் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், இங்கு இரு சக்கர வாகனங்கள், காா்கள் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது போல, கூடலழகா் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தைச் சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். தொடா்ந்து, தெப்பக்குளத்தில் பராமரிப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →