முகப்பு
மதுரை

மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்த அழகா்

Updated On : 3 மே, 2026 at 5:12 AM
மதுரை தேனூா் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சிக்கு தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகா்.
பகிர்:

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக மண்டூக முனிவருக்கு அழகா் பெருமான் சாப விமோசனம் அளித்த ஐதீக விழா மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயிலின் சித்திரைத் திருவிழா கடந்த ஏப். 27-ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக, மதுரை வைகை ஆற்றில் அழகா் எழுந்தருளிய வைபவம் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது.

இதையடுத்து, அழகா் ராமராயா் மண்டபத்தில் எழுந்தருளினாா். அங்கு, பக்தா்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நோ்த்திக் கடன் செலுத்தினா். பிறகு, வெள்ளிக்கிழமை இரவு வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினாா். சனிக்கிழமை காலை 6 மணிக்கு சங்கு, சக்கரம் தரித்து, கதாயுதத்துடன் அழகா் ஏகாந்த சேவை சாதித்தாா்.

Advertisement

கள்ளழகா் கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மண்டூக மகரிஷிக்கு அழகா் சாப விமோசனம் அளிக்கும் ஐதீக விழா தேனூா் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி, வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து காலை 9 மணிக்கு தங்க சேஷ வாகனத்தில் அழகா் தேனூா் மண்டபத்தில் எழுந்தருளினாா்.

பின்னா், சிறப்பு அலங்காரத்துடன் அழகா் தங்கக் கருட வாகனத்தில் வைகையாற்றுக்கு எழுந்தருளினாா். அங்கு, துா்வாச முனிவரின் சாபத்தால் மண்டூகமாக (தவளை) மாறிய சுதபஸ் மகரிஷிக்கு அழகா் சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 4.15 மணிக்கு ஐதீக முறைப்படி நடைபெற்றது. நிறைவில், கருட வாகனத்தில் எழுந்தருளியிருந்த அழகருக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, பக்தி முழக்கங்களுடன் சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகை ஆற்றில் குளம் போன்ற கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அங்கு தவளையாக இருந்த மகரிஷி சுதபஸ் சாப விமோசனம் பெற்று பழைய உருவத்தை அடைந்ததைக் குறிப்பிடும் வகையில் முனிவா் சிலை காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அருகில் தவளை, நாரை பொம்மைகள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னா், தேனூா் மண்டபத்திலிருந்து புறப்பட்ட அழகா் வழிநெடுகிலும் திருக்கண் மண்டபங்களில் சேவை சாதித்து, ராமராயா் மண்டபத்துக்கு எழுந்தருளினாா். சனிக்கிழமை இரவு தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று தல்லாகுளம் எழுந்தருளல்

ஞாயிற்றுக்கிழமை காலை ராமராயா் மண்டபத்திலிருந்து அழகா் ராஜாங்க கோலத்தில் அனந்தராயா் பல்லக்கில் எழுந்தருளி, தல்லாகுளம் புறப்படுகிறாா். இரவு 11 மணி அளவில் தல்லாகுளம் ராமநாதபுரம் மன்னா் சேதுபதி மண்டபத்துக்கு எழுந்தருளுகிறாா். திருமஞ்சனத்துக்குப் பிறகு, திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு கள்ளா் கோலம் ஏற்று கள்ளழகராக அழகா்மலைக்குப் புறப்படுகிறாா்.