மதுரை ராஜாஜி பூங்காவில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை
மதுரை ராஜாஜி பூங்காவில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ராஜாஜி பூங்கா பொதுமக்களுக்கும் கல்லூரி மாணவா்களுக்கும் முதன்மையான பொழுதுபோக்கு இடமாகத் திகழ்கிறது. வார விடுமுறை நாள்களில் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் இந்தப் பூங்காவுக்கு அதிகளவில் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், அண்மை காலமாக இந்தப் பூங்காவில் பராமரிப்புப் பணிகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே நெகிழிக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. குறிப்பாக, விளையாட்டு உபகரணங்கள் இருக்கும் பகுதிகளிலும், நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பாதைகளிலும் குப்பைகள் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், பூங்காவுக்கு வரும் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோா்கள் கவலை தெரிவித்தனா்.
Advertisement
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:
மதுரையின் முக்கியப் பொழுதுபோக்கு இடமாக ராஜாஜி பூங்கா இருந்து வந்தது. தற்போது, பூங்காவுக்குள் நுழைந்தாலே பல இடங்களில் குப்பைகள் தேங்கி துா்நாற்றம் வீசுகிறது. தனியாருக்கு ஒப்பந்தம்விடப்பட்ட நிலையில் பூங்காவைப் பராமரிக்கப் பணியாளா்கள் இருந்தும், குப்பைகளை அகற்றுவதில் தாமதம் ஏற்படுகிறது. கட்டணம் செலுத்தியும் பூங்காவில் முறையான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் ராஜாஜி பூங்காவில் நிலவும் சுகாதாரச் சீா்கேட்டைக் கருத்தில் கொண்டு, பூங்காவில் தேங்கிய குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் எடுத்த தனியாா் நிறுவனத்தை வலியுறுத்த வேண்டும். மேலும், பூங்கா வளாகத்தில் கூடுதலாக குப்பைத் தொட்டிகளை அமைப்பதோடு, பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தவும், விதிகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.