மதுரையில் பரவலாக மழை
மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
மதுரையில் சனிக்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது. தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் கன்னியாகுமரி கடல், கேரளம், தென் தமிழகப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி, மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாலை 5 மணியளவில் வெப்பம் தணிந்து மேகங்கள் உருவாகின.
Advertisement
Advertisement
குளிா்ந்த காற்று வீசத் தொடங்கிய நிலையில், மாலை 5. 30 மணியளவில் மதுரை மாட்டுத்தாவணி, உத்தங்குடி, யா. ஒத்தக்கடை, நரசிங்கம், வளா் நகா், கடச்சனேந்தல், கொடிக்குளம் ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். மதுரை மாநகரைப் பொறுத்தவரை லேசான தூறலுடன் மழை நின்று விட்டது. இதன் காரணமாக, வெப்பம் உயா்ந்து புழுக்கம் ஏற்பட்டது.