பழனி சந்தையில் குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படுமா?
பழனி, அக். 5: பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி மற்றும் வெண்டைக்காயின் விலை மிகவும் குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் அவற்றைப் பறித்து விற்கத் தயங்குகின்றனர். நஷ்டத்தை ஈடுகட்ட குளிர்பதனக் கிடங்
பழனி, அக். 5: பழனியைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி மற்றும் வெண்டைக்காயின் விலை மிகவும் குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் அவற்றைப் பறித்து விற்கத் தயங்குகின்றனர். நஷ்டத்தை ஈடுகட்ட குளிர்பதனக் கிடங்கை அரசு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழனியைச் சுற்றியுள்ள ஆயக்குடி, அமரபூண்டி, தொப்பம்பட்டி, கீரனூர், பாப்பம்பட்டி, சத்திரப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் நிலத்தடி நீர் குறைவாகக் கிடைப்பதால், விவசாயிகள் நாட்டுக் காய்கறிகளைப் பயிரிட்டு வருகின்றனர்.
உரத் தட்டுப்பாடு, உரங்கள், நுண்ணூக்கி விலை உயர்வு, விவசாய வேலை ஆள்கள் தட்டுப்பாடு ஆகியவற்றின் இடையே நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று விவசாயத்தையே நம்பி பயிர் செய்து வருகின்றனர்.
இப் பகுதியில் தற்போது வெண்டை, தக்காளி அதிகளவில் பயிர் செய்யப்பட்டது. ஆனால், விளைந்த தக்காளி, வெண்டைக்கு போதிய விலை கிடைக்காததால், அவற்றை பலர் செடியிலேயே விட்டுவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. 15 கிலோ கொண்ட தக்காளி கூடை 30 ரூபாயில் இருந்து 45 வரையில் விலை போகிறது.
வெண்டைக்காய் கிலோ ரூ. 3-ல் இருந்து 4 வரை விற்கிறது. விதை, உரம், விவசாய கூலி ஆகியவற்றைக் கணக்கிட்டுப் பார்க்கையில் விலை மிகவும் குறைவாகவே உள்ளதால், இந்த ஆண்டு பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
தக்காளியைப் பொருத்தமட்டிலும், நாட்டுத் தக்காளி நல்ல எடை மற்றும் புளிப்புத் தன்மை உள்ளதால், அதற்கு ஓரளவு விலை உள்ளது. ஆனால், ஹைபிரிட் தக்காளி பார்க்க கவர்ச்சியாக இருந்தாலும், விரைவில் கெட்டு விடுவதால், விலை குறைவாகவே உள்ளது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால், இறைச்சியை பலரும் தவிர்த்து காய்கறிகளை நாடுவர். ஆகவே, நாட்டுக் காய்களான வெண்டை, அவரை, பீர்க்கை போன்ற பொருள்கள் விலை உயருமென எதிர்பார்த்த நிலையில், நேர்மாறாக அவை விலை குறைந்து இங்கிலீஷ் காய்கறிகளான முட்டைகோஸ், காலிபிளவர், பீட்ரூட், கேரட், நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றின் விலையே உயர்ந்துள்ளதால், மலைவாழ் விவசாயிகளே பயனடைந்துள்ளனர்.
இதுகுறித்து கந்தப்பகவுண்டன்வலசைச் சேர்ந்த விவசாயி செல்வம் கூறுகையில், பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிகளவு காய்கறிகள் பயிர் செய்யப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால், இதில் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை. இடைத்தரகர்களே லாபமடைகின்றனர்.
விலை குறைவாக உள்ள காலங்களில் அழுகும் பொருள்களை இருப்பு வைக்க அரசு பழனி பகுதியில் குளிர்பதன வசதி அடங்கிய கிடங்கு அமைக்க நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஆகவே, விவசாயிகளைப் பாதுகாக்க பழனியில் நவீன குளிர்பதனக் கிடங்கு அமைத்து அதை குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.