திண்டுக்கல்

பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் மர்ம மரணம்:நடவடிக்கை எடுக்குமா தொழிலாளர் நலத்துறை?

பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் மர்ம மரணங்களைத் தடுப்பதற்கு, தொழிலாளர் நலத்துறை முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

ஆ. நங்கையார் மணி

பஞ்சாலைகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களின் மர்ம மரணங்களைத் தடுப்பதற்கு, தொழிலாளர் நலத்துறை முறையான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் கோவைக்கு அடுத்தபடியாக திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பஞ்சாலைகள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 285 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. சுமார் 5 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த பஞ்சாலைகளில் 75 சதவீதம் பெண் தொழிலாளர்களே. மீதமுள்ள 25 சதவீதத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் 15 சதவீதம் பேர் உள்ளனர். புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் நாள்தோறும் வேன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். சில பஞ்சாலைகளில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன.

பெண் ஊழியர்களைப் பொருத்தவரை, அவர்களின் உழைப்பை மட்டுமே கருத்தில் கொள்ளும் பஞ்சாலை நிர்வாகம், அவர்களின் இளம்வயது குறித்தும், கல்வி பற்றியும் சிந்திப்பதில்லை என, சமூக அமைப்புகள் பரவலாக புகார் எழுப்பி வருகின்றன.

பெற்றோரை இழந்த பெண் குழந்தைகள், அதிக பெண் குழந்தைகள் உள்ள குடும்பங்களை குறிவைத்து, சில முகவர்கள் மூலம் ஆள் பிடிக்கும் பணி நடைபெறுகிறது. பெரும்பாலானோர் 1 முதல் 5 ஆண்டு கால ஒப்பந்தத்தில் அழைத்து வரப்படுகின்றனர்.

திருமண நிதி, பொருளுதவி, ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்தில் வழங்க வேண்டிய முதிர்வுத் தொகை உள்ளிட்ட சலுகைகளை சில நிர்வாகங்கள் மட்டுமே வழங்குவதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சில பகுதிகளில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இந்த சலுகைகளும், பயிற்சியும் பெரும்பாலான ஊழியர்களுக்கு தற்போது வரை கிடைக்கவில்லை. திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண் ஊழியர்களை அழைத்து வரப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் தொலைதூரங்களுக்கு இயக்கப்படுகின்றன. அந்த வாகனங்களின் தரம் குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முறையான ஆய்வு மேற்கொள்வதில்லை.

நள்ளிரவு நேரங்களில் பணிமுடிந்து வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் பெண்களில் சிலர் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கடந்த ஆண்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 8 பெண்கள் உயிரிழந்துள்ளனர். விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை வெளிச்சத்துக்கு வருவதில்லை.

இது குறித்து, திருப்பூர் மக்கள் அமைப்பின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், ஹோப்ஸ் அமைப்பின் தலைவருமான என். பழனிச்சாமி தெரிவித்தது:

கடந்த 3 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பஞ்சாலைகளில் பணிபுரிந்து வந்த 84 பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். திருப்பூர் மக்கள் அமைப்பின் சார்பில், பஞ்சாலை குழந்தைத் தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்டு, திறன் பயிற்சி அளித்துள்ளோம். இதனால், பல பெண்கள் செவிலியர், ஓட்டுநர், கிராம நிர்வாக அலுவலர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

தொழிலாளர் நலத்துறை மூலம் உரிய ஆய்வு மேற்கொண்டு, 18 வயதுக்குள்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீட்கப்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளி, புதுவாழ்வுத் திட்டம் உள்பட அரசின் பல்வேறு சலுகைகள் பெறுவதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பேட்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து அபார வெற்றி!

இந்த வாரம் கலாரசிகன் - 22-02-2026

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

SCROLL FOR NEXT