திண்டுக்கல்

கொடைக்கானல் தனியார் பங்களாவில் நேபாளத் தம்பதி மர்மச் சாவு: சடலங்களை வாங்க உறவினர்கள் மறுப்பு

DIN

கொடைக்கானலில் உள்ள தனியார் பங்களாவில் வெள்ளிக்கிழமை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களது சடலங்களை வாங்க மறுத்த உறவினர்கள், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேபாள மாநிலம் புட்டோல் பகுதியைச் சேர்ந்தவர் சர்மா (63). இவரது இரண்டாவது மனைவி குமாரி (38). இவர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் வந்து இங்குள்ள நாயுடுபுரம் மல்லி சாலையில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாம்பார்புரம் பகுதியிலுள்ள மதுரையைச் சேர்ந்த நிதி நிறுவனத்துக்குச் சொந்தமான பங்களாவில் கடந்த 3 மாதங்களாக சர்மா, காவலாளியாக பணியாற்றி வந்தார்.
வழக்கம் போல வியாழக்கிழமை இரவு சர்மா, தனது மனைவி குமாரியுடன் பங்களாவுக்கு வேலைக்கு சென்றார். வெள்ளிக்கிழமை காலை நீண்ட நேரமாகியும் இவர்கள் தங்கியிருந்த அறை திறக்கப்படாமல் இருந்ததைத் தொடர்ந்து பங்களா மேலாளர் ரெங்கராஜன் ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது தம்பதிகள் இருவரும் மயங்கி கிடப்பதாக நினைத்து அவர் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அங்கு வந்த காவல் ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் போலீஸார் அறைக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சர்மாவும், அவரது மனைவி குமாரியும் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்களது சடலங்களை மீட்டு போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சர்மாவின் மகன் கிஷன் அளித்த புகாரின் பேரில் கொடைக்கானல் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அரசு மருத்துவமனைக்கு வந்த இறந்த தம்பதிகளின் உறவினர்கள், அவர்களது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி சடங்களை வாங்க மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்கள், சடலங்களை பெற்றுச் சென்றனர்.
இதுகுறித்து கொடைக்கானல் காவல் ஆய்வாளர் முருகானந்தம் கூறியதாவது: கொடைக்கானலில் வியாழக்கிழமை இரவு பல மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் தம்பதிகள் இருவரும் தாங்கள் தங்கியுள்ள அறையில் இருந்த ஜெனரேட்டரை இயக்கி உள்ளனர். அப்போது அதிலிருந்து வெளியான புகை, அறை முழுவதும் பரவியதால் மூச்சு திணறி அவர்கள் இறந்திருக்கலாம். இருப்பினும் இச் சம்பவம் குறித்து தனியார் பங்களாவிலுள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை இடா்பாடுகளில் இருந்து தொழிலாளா்களை பாதுகாக்க வேண்டும்

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

SCROLL FOR NEXT