திண்டுக்கல்

ஜிஎஸ்டி, வறட்சியால் நத்தம் ஆயத்த ஆடை தொழில் பாதிப்பு

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்று வரும் நத்தம் ஆயத்த ஆடை தொழில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் முதல் முறையாக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.

ஆ. நங்கையார் மணி

கடந்த கால்நூற்றாண்டுக்கும் மேலாக சிறப்பாக நடைபெற்று வரும் நத்தம் ஆயத்த ஆடை தொழில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, வறட்சி உள்ளிட்ட காரணங்களால் முதல் முறையாக அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியைச் சேர்ந்த மக்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது விவசாயம். முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்துக்கு பெயர் பெற்ற நத்தம், புளி மற்றும் கொய்யா சாகுபடியிலும் முன்னிலையில் உள்ளது. விவசாயம் நீங்கலாக, நத்தம் பகுதி மக்களின் பொருளாதாரத்துக்கு கை கொடுப்பது ஆயத்த ஆடை தொழில். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் அணியும் 22 செ.மீ. முதல் 44 செ.மீ. அளவிலான மேல் சட்டைகள் இங்கு தயாராகின்றன. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த தொழில், நத்தம், உலுப்பக்குடி, தேத்தாம்பட்டி, வத்திப்பட்டி, பரளி, அரவங்குறிச்சி உள்ளிட்ட 18 பட்டி கிராமங்கள் மட்டுமன்றி மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
நத்தத்தில் தயாரிக்கப்படும் சட்டைகள், தமிழகம் மட்டுமின்றி, கேரளாவுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. கேரளத்தை பொருத்தவரை, ஓணம் பண்டிகைக்கும், தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கும் நத்தத்தில் அதிக அளவில் சட்டைகள் தயாராகின்றன. ஆனால், சீசன் காலத்திற்கு மட்டுமின்றி ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு இருப்பது இத்தொழிலை சார்ந்து வாழ்வோருக்கு நம்பிக்கையாக உள்ளது.
ரூ.500 மற்றும் ரூ.1000 பண மதிப்பிழப்பைத் தொடர்ந்து, ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப் பின், பல்வேறு தொழில்களில் ஏற்பட்டுள்ள சரிவு நத்தம் ஆயத்த ஆடை தொழிலையும் விட்டு வைக்க வில்லை. மேலும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட வறட்சி பாதிப்பும், இத்தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற விற்பனையில், தற்போது 50 சதவீதம் கூட இல்லை என்பது நத்தம் பகுதி ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆயத்த ஆடை உற்பத்தியாளர் ஹக்கீம் கூறியதாவது: நத்தத்தில் குறைந்தபட்சமாக ரூ.120 முதல் அதிகபட்சம் ரூ.300 விலையிலான சட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. கடை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சைக்கிள் வியாபாரிகளின் முக்கிய கொள்முதல் மையமாக நத்தம் இருந்து வருகிறது. பல்வேறு வழிகளில் மறைமுகமாக வசூலிக்கப்பட்டு வந்த வரி, தற்போது ஜிஎஸ்டி மூலமாக வியாபாரிகள் தரப்பில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விட்டது. குறிப்பாக காலர் பிலிம்களுக்கு 28 சதவீதம், சட்டை மடிப்புக்கான அட்டைகளுக்கு 13 சதவீதம் என மூலப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படுவது உற்பத்தியாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில்லரை வியாபாரிகளுக்கும் (நடைபாதை வியாபாரிகள்) ஜிஎஸ்டி வரியுடனே விற்பனை செய்கிறோம். அவர்கள் விற்பனை செய்யும் போது, ரசீது வழங்கி ஜிஎஸ்டி வரி வசூலிக்க வாய்ப்பில்லை. நத்தத்தை பொருத்தவரை நிகழாண்டு தீபாவளி விற்பனை, உற்பத்தியாளர்கள் மட்டுமின்றி, வியாபாரிகளுக்கும் ஆறுதலாக இல்லை என்றார்.
பாதிக்கும் வேலைவாய்ப்பு: தீபாவளி விற்பனை பாதிப்பால், நத்தம் ஆயத்த ஆடை தொழிலை நம்பியுள்ள 2 ஆயிரம் பேரின் வேலைவாய்ப்பும் இனி பாதிப்புக்குள்ளாகும் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதுரை மாவட்டம், மேலூர் அடுத்துள்ள கேசம்பட்டியைச் சேர்ந்த தையல் தொழிலாளி மலைச்சாமி கூறியதாவது: ஓணம் மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை மந்தமாக இருப்பதால், நத்தத்தில் உள்ள சுமார் 150 உற்பத்தியாளர்களிடமும் சரக்குகள் தேங்கியுள்ளன.
இதன் எதிரொலியாக, இனி வரும் நாள்களில் வேலைவாய்ப்பும் குறைந்துவிடும். தற்போது ரூ.400 வரை ஊதியம் கிடைக்கிறது. சரக்குகள் தேக்கத்தால் இந்த ஊதியம் இனி ரூ.200ஆக குறையும். வறட்சி, ஜிஎஸ்டி போன்ற பிரச்னையிலிருந்து இத்தொழில் மீண்டால் மட்டுமே, 2 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு உறுதியாகும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT