மாநகராட்சியின் நடவடிக்கைக்கு எதிராக அமைச்சர் வீட்டை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை
பராமரிப்புக்காக வீடுகளை காலி செய்வதற்கு மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தடுக்கக் கோரி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்
பராமரிப்புக்காக வீடுகளை காலி செய்வதற்கு மாநகராட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கையை தடுக்கக் கோரி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வீட்டை துப்புரவுப் பணியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் தங்குவதற்கு கடந்த 1963ஆம் ஆண்டு நெட்டுத் தெரு பகுதியில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பின்னர், துப்புரவுத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அவர்களது உறவினர்களும் அந்த பகுதியில் உள்ள காலி இடத்தில் தற்போது 600 வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர்.
இந்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்துள்ள பழமையான வீடுகளை இடித்துவிட்டு, புதிய வீடுகள் கட்டுவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்காக வீடுகளை காலி செய்யுமாறு நோட்டீஸ் அளித்துள்ளனர். ஆனால், வீடுகளை காலி செய்ய விரும்பாத துப்புரவுப் பணியாளர்கள், மாநகராட்சியின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் வீட்டிற்கு சென்று முற்றுகையிட்டனர்.
இதனை அடுத்து துப்புரவுப் பணியாளர்களுடன் பேசிய அமைச்சர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருடன் கலந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.