FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நடுப்பக்கக் கட்டுரைகள்

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!

ஒருவரின் உடல்நலன் மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் சுகாதாரம் அடிப்படைக் காரணமானதைப் பற்றி...

Updated On : 2 மே 2026, 4:30 am IST
நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!
பகிர்:

பகவத் கீதையின் 13-ஆவது அத்தியாயத்தில், ஒரு மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அதற்காக அவன் கடைப்பிடிக்க வேண்டிய மாண்புகளில் ஒன்று தூய்மை. மனிதன் வேட்டையாடி வாழ்ந்து வந்த வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கி, அதி நவீன நகர்ப்புற மனிதன் வரையிலுமான காலகட்டத்தில் வாழ்க்கையை நாம் மிகவும் அதிகமான அளவில் மேம்படுத்திக் கொண்டு விட்டோம்.

மனித வளர்ச்சி என்பது தனி நபர்களின் நலன்கள் குறித்த அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எங்கு உள்ளேயும், வெளியேயும் தூய்மை இருக்கிறதோ அங்கே இறைமையும் இருக்கிறது என்றார் மகாத்மா காந்தி. மேலும், அவர் ஒழுங்கு, கட்டுப்பாடு இல்லா இடம் எப்படி சுத்தமானதாக இருக்க முடியும்.

எளிமையை விரும்பும் ஒருவன் சுத்தமற்றவனாக இருக்க மாட்டான். எனவே, சுத்தத்தில் எளிமையும் கலந்தே இருக்கிறது. நாடு முழுவதும் ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். அதன் சுகாதாரச் சீர்கேட்டை பத்திரிகைச் செய்தியாகவே எழுதினார். மகாத்மா காந்திக்கு தூய்மை என்பது வெறும் உடலியல் தேவை மட்டுமல்ல; அது ஓர் வாழ்க்கை நெறியுமாகும். இது மெய்யறிதலில் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகும். மகாத்மா காந்தி உண்மையைக் கடவுளாக வழிபட்டார்.

Advertisement

Advertisement

எங்கெங்கும் நிறைந்திருக்கும் உண்மையாகிய கடவுள் தூய்மையானவர். எனவேதான், தூய்மையை கடவுள் நிலையுடன் மகாத்மா காந்தி ஒப்பிட்டார். சுதந்திரத்துக்கு மிகவும் அத்தியாவசியமான படி தூய்மை ஆகும். மகாத்மா காந்தியின் ஆக்கபூர்வமான 18 திட்டங்களில் ஒன்றாக தூய்மையும் இடம்பெற்றிருந்தது.

உண்மைக்கு மிக நெருக்கமான வெளிப்பாடுதான் வாழ்க்கை என்பதால், வாழ்க்கையை உண்மைக்கும், கடவுளுக்கும் நிகராக அவர் கூறினார். அதனால்தான், மகாத்மா காந்தி துப்புரவையும் தூய்மையையும் அகம்-புறம் ஆகிய இரண்டின் தேவையாகவும் உணர்ந்தார். சுதந்திரப் போராட்டப் பள்ளியில் தேர்ச்சி பெறுவதற்கு துப்புரவும், தூய்மையும் தேர்வுகள். வினோபா பாவே, தக்கர் பாபா, ஜே.சி.குமரப்பா போன்ற எண்ணற்ற அறிவார்ந்த இளைஞர்கள் சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தனர்.

துப்புரவு, தூய்மை இரண்டையும் சுதந்திரத்துக்கான அடிப்படையாகக் கைக்கொண்டனர். மனிதக் கழிவுகளை அவதானமாக அகற்ற வேண்டிய தேவை 1850-க்கு பின்னர் தெளிவாக உணரப்பட்டது. 2011-ஆம் ஆண்டில் எடுத்த புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் தொலைக்காட்சி, தொலைபேசி இணைப்புகளைக் காட்டிலும் கழிப்பறை வசதிகள் குறைவாக உள்ளன என்ற தகவல் வெளியிடப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் உலகெங்கிலும் 260 கோடி மக்கள் கழிப்பறை வசதிகள் இல்லாமலும், அதனுடன் தொடர்புடைய பல சிக்கல்களையும் எதிர்கொண்டனர். ஒரு நாடு அல்லது மாநிலம் வளர்ச்சி அடைவதற்கான மிகத் தெளிவான அடையாளம் அதன் சுகாதாரம்தான். உயரமான கட்டடங்கள், விரிவான சாலைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்தும் இருந்தாலும் பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்கள் சுத்தமற்றதாக இருந்தால், அந்த முன்னேற்றம் முழுமை பெறாது.

குறிப்பாக, பேருந்து நிலையங்கள், பொது மருத்துவமனைகள், சாலையோர அரசுக் கழிப்பறைகள் போன்றவை தினமும் ஆயிரக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகின்றனர். வெளிநாட்டிலிருந்து அல்லது பிற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகள் முதலில் காண்பது இத்தகைய இடங்களைத்தான். அங்கு காணப்படும் சுத்தம், ஒழுங்கு, வசதிகள் ஆகியவை ஒரு மாநிலத்தின் தரத்தைப் பிரதிபலிக்கின்றன.

பொதுமக்கள் பயன்படுத்தும் இத்தகைய கழிப்பறைகள் சுத்தமாக இல்லாவிட்டால், மக்கள் திறந்த வெளியில் கழிவுகளை கழிக்க நேரிடும். இது சுற்றுச்சூழல் மாசுபாட்டையும், சுகாதாரப் பிரச்னைகளையும் உருவாக்கும். ஓரளவுக்கு நன்றாகக் கட்டப்பட்ட கழிப்பறைகள்கூட, சில நாள்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடுகின்றன. ஆகவே, இந்த வகை கழிப்பறைகளை தூய்மையாகப் பராமரிக்க அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவரின் உடல்நலன் மட்டுமல்லாமல், சமூகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கும் சுகாதாரம் அடிப்படைக் காரணமாகிறது. சுத்தமற்ற சூழலில் வாழ்வதால், பலவித நோய்த் தொற்றுகள் பரவுகின்றன. ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருந்தால்தான், கல்வி, வேலை, குடும்பம் போன்ற அனைத்திலும் முன்னேற முடியும். மக்களின் ஆரோக்கியம்தான் நாட்டின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. சிறு வயதிலிருந்தே நல்ல பழக்க வழக்கங்கள் உருவானால், அது வாழ்நாள் முழுவதும் தொடரும்.

'என் வீடு சுத்தமாக இருந்தால் போதும்' என்கிற மனப்பான்மையிலிருந்து என் சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு மக்கள் மாற வேண்டும். குப்பைகளை ஆங்காங்கே வீசாமல், குறிப்பிட்ட தொட்டிகளில் போடுவது ஒரு சிறிய செயல்போலத் தோன்றினாலும், அது பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

பொதுச் சொத்துகளைப் பாதுகாப்பது என்பது நமது சமூக நாகரிகத்தின் அடையாளமாகும். கழிப்பறைகளில் தண்ணீர் வசதி, சுத்திகரிப்பு பொருள்கள் போன்றவை எப்போதும் கிடைக்க வேண்டும். குப்பை மேலாண்மை முறைகள் நவீன தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படுத்தப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்களிலும் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். தனி நபர் முதல் உலக சுகாதாரம் வரை நம் கரங்களில்தான் உள்ளது. சமூக அமைப்புகள், தன்னார்வக் குழுக்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகிக்கலாம். தூய்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகரிக்கலாம். இன்று தொடங்கினால் நாளை நம் உலகம் சுகாதாரத்தில் வெற்றி நடைபோடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments