திண்டுக்கல் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதில் சிக்கல் நீடிப்பு: வருவாய்த்துறையினர் மீது புகார்
திண்டுக்கல் அருகே நீர்நிலை மற்றும் நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மூலம்
திண்டுக்கல் அருகே நீர்நிலை மற்றும் நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு மூலம் தெரிவித்தும், வருவாய்த்துறையினர் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள ஜம்புளியம்பட்டி வன்னியப்பாறைப்பட்டி பகுதிகளுக்கு இடையே சிறுமலை ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடை வழியாக செல்லும் மழைநீர், அந்த பகுதியில் 15 ஏக்கர் பரப்பிலான சின்னக்குளம், 12 ஏக்கர் மந்தைக்குளம், 18 ஏக்கர் பிரான்குளம் ஆகியவற்றை நிரப்பிய பின், சந்தானவர்த்தினி ஆற்றுடன் இணைந்து கொடகனாற்றில் சேர்கிறது.
இந்நிலையில், சின்னக்குளத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள சிறுமலை ஓடையில் தடுப்பணை அமைத்து 9 ஏக்கரில் தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. மர ஷட்டர்களுடன் கூடிய மதகு அமைத்து, அங்கிருந்து வன்னியப்பாறைப்பட்டி பாறைக்குளத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அந்த தடுப்பணை சேதப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நீர்பிடிப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 ஏக்கர் பரப்பிலான பிரான்குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதை முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. 8 அடிக்கு தண்ணீர் தேங்கும் ஒரு பகுதி, தண்ணீர் திறப்பதற்கான மர ஷட்டர் பகுதிகள் கம்பி வேலி மூலம் தனியார் தோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓடையாக சுருங்கி விட்ட வாய்க்காலின் மீது அனுமதியின்றி பெரிய பாலமும் கட்டப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் அதிக அளவில் மணல் திருட்டு நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர்.கடந்த 2016ஆம் ஆண்டு ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு குறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சிறுமலை ஓடை மற்றும் தண்ணீர் தேங்கும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்பு பகுதிகளை நில அளவை செய்வதற்கு வருவாய்த்துறையினர் ஒத்துழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஓராண்டுக்கும் மேலாக பொதுமக்களின் முக்கியமான நீராதார பிரச்னைக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜம்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
நீரோடை ஆக்கிரமிப்பு காரணமாக, ஜம்புளியம்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள குளங்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லை. இதனால், மந்தைக்குளம் மற்றும் பிரான்குளத்தைச் சுற்றியுள்ள சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீராதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளித்து வரும் மாவட்ட நிர்வாகம், ஜம்புளியம்பட்டி பகுதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.
அதிகாரி விளக்கம்
இதுதொடர்பாக திண்டுக்கல் கோட்டாட்சியர்(பொ) இ.ஜான்சன் கூறியது:
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 2 சி பட்டா மூலம் நீர் நிலைகளில் தண்ணீர் சேமிப்புக்கு இடையூறாக உள்ள விவசாயிகள் கூட வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அதனால், ஜம்புளியம்பட்டி பகுதியில் நீரோடை ஆக்கிரமிப்பினை அகற்றுவதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.