13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தனி வாட்ஸ் ஆப் கணக்குகள் அறிமுகம்!
வாட்ஸ் ஆப் செயலி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் நிர்வகிக்கும் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி...
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் நிர்வகிக்கக் கூடிய வாட்ஸ் ஆப் கணக்கு மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
”பெற்றோர் மற்றும் நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டு புதிதாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் நிர்வகிக்கும் வாட்ஸ் ஆப் கணக்குகளை 13 வயதுகுட்பட்ட சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இதன்மூலம், அவர்கள் அனுப்பும் செய்திகள் மற்றும் உரையாடல்களை பெற்றோர் கண்காணிக்க முடியும்” என வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது இணையப் பதிவில் தெரிவித்துள்ளது.
தொடர்பு கொள்வோர் பட்டியலை பெற்றோர் நிர்வகிக்க முடியும் என்றாலும் செய்தி அனுப்புவது தொடர்பான பாதுகாப்பு வாட்ஸ் ஆப் செயலியின் தற்போதைய முறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் சாதனத்தில் பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் அமைப்புகளை தனியே ’பேரண்ட் பின்’ எனப்படும் பாஸ்வர்ட் மூலம் பெற்றோர் நிர்வகிக்கலாம் என்றும், அதனை அவர்கள் மட்டுமே மாற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு சில அம்சங்கள் படிப்படியாக கொண்டுவரப்படவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.