திண்டுக்கல்

இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் 40ஆயிரம் விவசாயிகள் தவிப்பு!

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40ஆயிரம் விவசாயிகள், இழப்பீட்டுத் தொகை

ஆ. நங்கையார் மணி

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 40ஆயிரம் விவசாயிகள், இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் ஓராண்டுக்கும் மேல் தவித்து வருகின்றனர்.
இம் மாவட்டத்தில் கடந்த 2016-17ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்தனர். அதன்படி,  நெல், சோளம், கம்பு, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பாசிப் பயறு, நிலக்கடலை, எள், பருத்தி என மொத்தம் 74 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வட்டாரம் நீங்கலாக எஞ்சிய 13 வட்டாரங்களில் சுமார் 40 ஆயிரம் விவசாயிகள் இத்திட்டத்தில் இணைந்திருந்தனர். காப்பீட்டுத் தொகையாக ரூ.1.50 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. 
 கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால் அனைத்து வகையான வேளாண் பயிர்களிலும் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 
இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால், ஓராண்டு முடிந்து விட்ட நிலையில் தற்போது வரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இழப்பீடு வழங்கக் கோரி, மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். 
 கடந்த டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தின் போது, 15 நாள்களுக்குள் இழப்பீட்டுத் தொகை கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இதுவரையில் பயன் இல்லை. இதனால், காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்த விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். 
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் இரா. சச்சிதானந்தம் கூறியதாவது: 
தொப்பம்பட்டி அடுத்துள்ள தாழையூத்து பகுதியைச் சேர்ந்த விவசாயி சின்னத்துரை என்பவர், வேளாண்மை இயக்குநர் அலுவலகத்திற்கு இழப்பீடு கோரி மனு அளித்தார். அதற்கு பதில் அளித்த இயக்குநர் அலுவலகம், செயற்கோள் மூலம் தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டதில் பயிர் மகசூல் இழப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளது. 
இது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால், பொதுத்துறை நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால் உறுதியாக இழப்பீட்டுத் தொகை கிடைக்கும் என்றும், காப்பீட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் கூறுகின்றனர். 
அதிகாரிகளின் இரு வேறு கருத்தால், விவசாயிகள் விரக்தி அடைந்துள்ளனர் என்றார்.

ஆர்வம் இல்லாத விவசாயிகள்
இச்சூழலில், நிகழாண்டில் நெற்பயிர் நீங்கலாக, பிற பயிர் வகைகளை பிரதமரின் பயிர் காப்பீட்டுத்  திட்டத்தின் கீழ் காப்பீடு செய்தவதற்கு விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. கடந்த ஆண்டு காப்பீடு செய்வதற்கு ஜனவரி 15 ஆம் தேதியை இறுதி நாளாக அறிவித்து துரிதமாக செயல்பட்ட காப்பீட்டு நிறுவனங்கள், நிகழாண்டில் தற்போது வரை எவ்வித அறிவிப்பையும் வெளியிட வில்லை. வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் மட்டும் நிர்பந்தத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ளனர். மாவட்டத்தில் 1.26 லட்சம் ஹெக்டேரில் வேளாண் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பிற விவசாயிகள் யாரும் இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை இணையவில்லை என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT