முகப்பு
திண்டுக்கல்

பஞ்சாலை வேன் ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வில்லை: அடிக்கடி விபத்தில் சிக்குவதாக புகார்

ஓய்வின்றி பணிபுரியும் ஓட்டுநர்களால், திண்டுக்கல் மாவட்ட கிராமப்புறங்களிலிருந்து இளம்பெண் தொழிலாளர்களை

Updated On : 9 ஜூலை, 2018 at 7:07 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

ஓய்வின்றி பணிபுரியும் ஓட்டுநர்களால், திண்டுக்கல் மாவட்ட கிராமப்புறங்களிலிருந்து இளம்பெண் தொழிலாளர்களை அழைத்து வரும் பஞ்சாலை வேன்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
      மாவட்டத்தில் வேடசந்தூர், ஆத்தூர் ஆகிய வட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இளம் பெண்களே அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். திண்டுக்கல் மட்டுமின்றி, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த இளம்பெண்கள் ஆலைகளுக்குச் சொந்தமான வேன்களிலும், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் வேன்கள் மூலமாகவும் அழைத்து வரப்படுகின்றனர்.    ஆனால், அனுபவம் இல்லாததாலும், பணிச் சுமைகளாலும், அலட்சியமாகவும் பஞ்சாலை வேன்களை ஓட்டிச் செல்லும் ஓட்டுநர்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. 
இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் கூட, சம்பந்தப்பட்ட தொழிலாளியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வெளியில் தெரியாமல் மறைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.     பஞ்சாலைகளில் பணிபுரியும் இளம்பெண்களின் நலன் கருதி, வேன் ஓட்டும் பணிக்கு அனுபவசாலிகளை பணியில் அமர்த்த வேண்டும். மேலும், ஓட்டுநர்களுக்கு முறையான ஓய்வு அளிக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து திண்டுக்கல் ஹோப் மற்றும் திருப்பூர் மக்கள் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் பழனிச்சாமி கூறியது: பஞ்சாலைகளில் காலை 6 மணி ஷிப்டுக்கு வரும் தொழிலாளர்களை அழைப்பதற்காக, அதிகாலை 3 மணி முதல் கிராமப்புறங்களுக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன.     அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி ஷிப்டுக்கு நண்பகல் 12 மணி முதல் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. போதிய ஓய்வு இல்லாமல் பணிபுரியும் ஓட்டுநர்களால் அதிக அளவு விபத்து ஏற்படுகின்றன. 
கடந்த சில ஆண்டுகளாக விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இதற்கு தீர்வு காண்பதற்கு பஞ்சாலை நிர்வாகங்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. மேலும், வேன்களில் அழைத்து வரப்படும்  பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகளும் அளிக்கப்படுகின்றன. இது குறித்து தொழிலாளர் நலத் துறை மற்றும் சமூக நலத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 இளம்பெண் தொழிலாளர்களின் நலன் கருதி, பஞ்சாலை உரிமையாளர்கள், தன்னார்வல அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு அலுவலர்கள் முன்னிலையில் ஆலோசனை நடத்தி தீர்வு காண்பதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.