பழனியில் கூட்டுறவு சங்கத்திற்கு திமுகவினர் பூட்டு போட்டு போராட்டம்
பழனியில் வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுகவினர் மனுக்கள்
பழனியில் வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தில் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதால் வியாழக்கிழமை திமுகவினர் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கூட்டுறவு சங்க தேர்தலை முன்னிட்டு பல்வேறு கூட்டுறவு சங்கங்களிலும் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
அதிமுக, அமமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிமுகவினர் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பட்டியல் ஒட்டப்பட்டது. இதையடுத்து துணைப்பதிவாளர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
முறையாக பரிசீலனை செய்து சரியான பட்டியல் ஒட்டுவதாக தெரிவித்த நிலையில் இன்றும் அதிமுகவினரின் பெயர்கள் மட்டுமே ஒட்டப்பட்டது. இதையடுத்து புதன்கிழமை பழனி- திண்டுக்கல் சாலையில் உள்ள பழனி வட்டார வேளாண்மைப்பொறியியல் பணிக்கூட்டுறவு மையத்தை திமுக ஒன்றிய செயலாளர் பாண்டி தலைமையில் முற்றுகையிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட திமுகவினர் ஆளும் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி மையத்தின் அலுவலகத்திற்கு தாங்கள் கொண்டு வந்த பூட்டை போட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போராட்டம் நடத்திய திமுகவினரை கைது செய்தனர்.