முகப்பு
திண்டுக்கல்

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம்  நடைபெற்றது.

Updated On : 30 மார்ச், 2018 at 1:28 AM
பகிர்:

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித்தேரோட்டம்  நடைபெற்றது.  இன்று(வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி திருஆவினன்குடிக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை முன்னிட்டு  பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, கொடுமுடி காவிரி தீர்த்தம் எடுத்து வந்து பழனி  தண்டாயுதபாணி சுவாமிக்கு தீர்த்த அபிஷேகம் செலுத்தி வந்தனர்.  
விழா நாட்களில் வள்ளி, தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி வெள்ளிக் காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்கமயில், வெள்ளி யானை போன்ற வாகனங்களில்  நான்கு கிரிவீதிகளில் எழுந்தருளினார்.  வியாழக்கிழமை மாலை அடிவாரம் செளமிய நாராயண கவரய நாயக்கர் மண்டபத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது.  கல்யாண விநாயகர் முன்பாக வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமிக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற 16 வகையான பொருட்களால் சோடஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. 
பின் பட்டாடைகள்,  வண்ண மாலைகள், தங்க நகைகள் சார்த்தப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சார்யார்கள் வேதபாராயணம் ஓத, ஓதுவார்கள் திருமுறைப்பாடல்கள் பாட, மங்கள வாத்தியம் முழங்க  மங்கலநாண் அணிவிக்கும் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது.  பின்னர் சுவாமிக்கு சோடஷ தீபாராதனை, மகாதீபாரதனை நடைபெற்றது.  
திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு மங்கல நாண் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.  திருக்கல்யாணத்தை தொடர்ந்து தம்பதி சமேதராக  முத்துக்குமாரசாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித் தேரில்  நான்கு கிரிவீதிகளில் எழுந்தருளினார்.  இன்று (வெள்ளிக்கிழமை)  பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது.  வரும் திங்கள்கிழமை திருக்கொடியிறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.
 நிகழ்ச்சியில் பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் தனசேகரன், பழனிவேலு, சங்கராலயம் பாலசுப்பிரமணியம்   உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.