திண்டுக்கல்லில் வீடு புகுந்து 2 பெண்கள் குத்திக் கொலை
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வீடு புகுந்து 2 பெண்களை குத்திக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை வீடு புகுந்து 2 பெண்களை குத்திக்கொன்ற 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் யூசுப்பியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது (50). இவரது மனைவி கொல்சம் பீவி(45). இவர்களது மகன் ஷேக் பரீத் என்பவரின் மனைவி மதினா பேகம், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவால் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
சாகுல்ஹமீது குடும்பத்தினர் சரியான முறையில் கவனிக்காததே மதினா பேகத்தின் இறப்புக்கு காரணம் என அவரது உறவினர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர், யூசுப்பியா நகரில் உள்ள வீட்டுக்குள் புகுந்து சாகுல்ஹமீது, கொல்சம் பீவி, இவரது தங்கை பர்கத்நிஷா(40) ஆகியோரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.அங்கு சிகிச்சைப் பலனின்றி பர்கத்நிஷா உயிரிழந்தார். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கொல்சம் பீவி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த சாகுல்ஹமீதுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீடுபுகுந்து கத்தியால் குத்தியவர்கள், மதினா பேகத்தின் சகோதரர்களாக இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துதப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.