குழந்தை வேலப்பர் கோயிலில் திருவிழா கொடியேற்றம்
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இந்த கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு முன்னிட்டு ஸ்ரீ குழந்தை வேலப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கோயிலின் வளாகத்திலுள்ள கொடி மரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் அதிகாரிகள், பூம்பாறை பகுதியைச் சேர்ந்த விழாக் குழுவினர் மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். திருவிழாவின் முதல் நாளில் குழந்தை வேலப்பர் சேவல் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அன்னம், மயில், காளை, ஆட்டுகிடா, பூதம், சிங்கம், யானை வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வரும் 31-ஆம் தேதி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி குழந்தை வேலப்பர் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு 10-நாள்கள் திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகத்தினர் மற்றும் குழந்தை வேலப்பர் விழாக்குழுவினர், பொது மக்கள் செய்துள்ளனர்.