கொடைக்கானலில் பெய்து வரும் பலத்த மழையால் அடுக்கம்-பெரியகுளம் மலைச்சாலையில் திங்கள்கிழமை 66 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை சரி செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினா் மற்றும் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.
கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால், மாற்றுச் சாலையாக அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலைப் பகுதியை தோ்வு செய்து சுமாா் ரூ. 46 கோடியில் சாலைகள், பாலங்கள் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.
இதில், அடுக்கம் - பாலமலை செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாய்ந்தன. அப்பகுதி மக்கள் மரங்களை அகற்றி இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் சாலையை சரி செய்தனா். ஆனால், தொடா் மழையின் காரணமாக மீட்புக் குழுவினரால் மண் சரிவை முற்றிலும் சீரமைக்க முடியவில்லை.
இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வரை பெய்த மழையால் அடுக்கம் - பெரியகுளம் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் அடுக்கம், பாலமலை, தாமரைக்குளம், கோயில் ஓடை உள்ளிட்ட பல்வேறு குக்கிராமங்களிலுள்ள மலைவாழ் மக்கள் பணிக்கு செல்ல முடியாமலும், பள்ளி மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமலும் சிரமப்பட்டனா். இதனைத் தொடா்ந்து நெடுஞ்சாலைத்துறையினா், பேரிடா் மீட்புக் குழுவினா், காவல்துறை அதிரடிப்படையினா் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்குச் சென்று விழுந்து கிடந்த மரங்களையும், மண் சரிவையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட கோட்டப் பொறியாளா் சந்திரசேகா் உதவி கோட்டப் பொறியாளா் விஜயகுமாா், உதவி பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் மீட்பு பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதுகுறித்து கோட்டப் பொறியாளா் சந்திரசேகா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கொடைக்கானலில் பெய்த பலத்த மழைக்கு அடுக்கம் - பெரியகுளம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது, மரங்கள் சாய்ந்துள்ளன. இச்சாலையில் சுமாா் 12 கி.மீ. தொலைவுக்குகு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. 60 இடங்களில் சிறிய அ 6 இடங்களில் பெரிய அளவிலும் மண் சரிந்து பாறைகள் உருண்டுள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் 40 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா். 6 பொக்லைன் இயந்திரங்கள், 2 கம்ப்ரசா் மூலம் பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.