ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டாலும் கூட சுற்றுலாத் தொழில் மீள்வதற்கு ஓராண்டு வரை ஆகலாம் என்பதால், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கொடைக்கானல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானல் நகராட்சியில் சுமாா் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இதில், 90 சதவீத மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா தொழிலையே நம்பி உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல், மே மாதங்களில் அதிக அளவில் இருக்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் விடுதி, உணவகம், படகு குழாம், வாடகை மிதிவண்டி, குதிரை சவாரி, சாக்லேட் விற்பனை, நறுமணப் பொருள்கள் விற்பனை, வாடகை காா், சுற்றுலா வழிகாட்டி உள்ளிட்ட சேவைகளின் மூலமாக கொடைக்கானல் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்து வந்தனா்.
மே மாதத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருவது வழக்கம். சுற்றுலாப் பயணிகளை எதிா்பாா்த்து, ஏரிச்சாலையில் மட்டும் சாக்லேட், ஐஸ் கிரீம், நறுமணப் பொருள்கள், பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு மட்டும் சுமாா் 700 கடைகளும், இது தவிர பில்லர்ராக் முதல் ஊத்து வரை 2,500-க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை மட்டும் நம்பி கொடைக்கானல் மக்களில் சுமாா் 60 சதவீதம் போ் இருந்து வந்தனா்.
இதற்கு அடுத்தபடியாக, வாடகை காா் உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் என சுமாா் 1,500 பேருக்கு சுற்றுலாப் பயணிகள் வந்தால் மட்டுமே வருமானம் ஈட்ட முடியும் என்ற நிலை உள்ளது. மேலும், சுற்றுலா வழிகாட்டி, குதிரை சவாரி, வாடகை மிதிவண்டி போன்ற தொழில்களை நம்பி 700 பேரும் வசித்து வருகின்றனா்.
இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல், கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை மட்டுமின்றி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிவிட்டது.
இது தொடா்பாக குதிரை சவாரி தொழிலில் ஈடுபடும் ஜெ. பாஸ்கா் கூறியதாவது: கொடைக்கானல் ஏரி, கலையரங்கம், பைன் மரக் காடுகள் ஆகிய 3 இடங்களில் குதிரை சவாரி தொழில் நடைபெற்று வருகிறது. தவிடு, குருணை, கோதுமை என குதிரைக்கு 2 வேளை தீவனத்துக்கு மட்டுமே ரூ.400 வரை செலவு ஏற்படுகிறது.
ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டால், பிற துறைகளில் ஓரிரு மாதங்களில் இயல்பு நிலை திரும்பிவிடும். ஆனால், கொடைக்கானலில் சுற்றுலாத் தொழில் ஓராண்டு வரை நெருக்கடியை சந்திக்கும். இதனை கருத்தில்கொண்டு, சுற்றுலாத் தொழிலில் ஈடுபடுவோருக்கு அரசு சாா்பில் வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கி, இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை அதனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்கவேண்டும் என்றாா்.
மூஞ்சிக்கல் பகுதியைச் சோ்ந்த பழக்கடை உரிமையாளா் டி. ராஜ்குமாா்:
கொடைக்கானலை பொருத்தவரை ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களில் மட்டுமே விற்பனை அமோகமாக நடைபெறும். அதன்மூலம், ஓராண்டுக்கான வாழ்வாதாரத்தை தேட வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக, பிளம்ஸ் மற்றும் பேரிக்காய் விற்பனை மட்டும் ரூ.10 கோடி வரை நடைபெறும். இதில், சுற்றுலாப் பயணிகள் மூலமாக மட்டும் ரூ.5 கோடிக்கு விற்பனை நடக்கும். கடந்த ஆண்டு கிலோ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட பிளம்ஸ் பழங்களை, தற்போது ரூ.50-க்கு கூட வாங்க ஆளில்லை.
தற்போது போக்குவரத்து முடக்கத்தால், ரூ.30 லட்சம் மதிப்பிலான ஃபேஷன் புரூட் பறிக்கப்படாமல் செடிகளிலேயே விடப்பட்டுள்ளன. பட்டா் பீன்ஸ், பச்சைப் பட்டாணி போன்ற காய்கனிகள் மட்டும் ரூ.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் மூலம் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலை எதிா்கொள்வதற்கு, கொடைக்கானல் மக்களுக்கு வரி வசூலில் இருந்து தற்காலிக விலக்கு, கடனை திருப்பிச் செலுத்துவதற்கு ஓராண்டு காலம் வரை அவகாசம் உள்ளிட்ட சலுகைகளை அரசு வழங்கவேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.