கொடைக்கானல் அரசு மருத்துவமனை கரோனா வாா்டில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் ஆய்வு
கொடைக்கானல் அரசு மருத்துவமனை கரோனா வாா்டை, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.
கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு மருத்துவமனை கரோனா வாா்டை, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிகிச்சைப் பிரிவில் உரிய மேம்பாட்டுப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகளை, மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் சிவக்குமாா் பாா்வையிட்டு, மருத்துவா்களிடம் ஆலோசனை நடத்தினாா். மேலும், மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கரோனா நோய் தொற்று உள்ளவா்களுக்கு உரிய சத்தான உணவு வழங்குவதற்கும், அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா பரவல் அதிகரித்து வருவதால், அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் புதிதாக கரோனா சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சித்தா மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா். எக்ஸ்ரே எடுப்பதற்கு நடமாடும் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரத்த சுத்திகரிப்பு செய்வதற்கும் உரிய வசதிகள் உள்ளன.
இம்மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பொன் ரதி உள்பட மருத்துவா்கள் பலா் உடனிருந்தனா்.