ரெட்டியாா்சத்திரத்தில் 95 சதவீத குளங்களில் தண்ணீா் இல்லை: ஆக்கிரமிப்புகளால் தொடரும் பாதிப்பு
முறைகேடாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் காரணமாக மலைப் பகுதிகளில் மழை பெய்தும் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள 95 சதவீத குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
திண்டுக்கல்: கீழ்பழனி மலையின் கிழக்குப் பகுதியில் ஆக்கிரமிப்பு, முறைகேடாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் காரணமாக மலைப் பகுதிகளில் மழை பெய்தும் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திலுள்ள 95 சதவீத குளங்களுக்கு தண்ணீா் கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட நிகழாண்டில் கூடுதலான மழைப் பொழிவு கிடைத்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்திலுள்ள பெரும்பாலான அணைகளும் நிரம்பியன. ஆனாலும், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மட்டும் 95 சதவீத குளங்களில் தண்ணீா் இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். கொடகனாறு பாசன விவசாயிகளின் தொடா் போராட்டம் காரணமாக, தாமரைக்குளம், அவில்தாா் குளம், பிரம்மசமுத்திரம் குளம், ஆயப்பண்ணைக்குளம் ஆகிய 4 குளங்கள் மட்டுமே கொடகனாறு தண்ணீா் மூலம் நிரம்பியுள்ளன.
ஆனால், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தின் பெரும் பகுதிகளிலுள்ள குளங்கள், கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வழக்கம் போல் வட நிலையில் உள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். இந்த வறட்சிக்கு குறிப்பிட்ட சிலா், கீழ்பழனி மலையின் கிழக்குப் பகுதியில் ஆக்கிரமித்துள்ளதும், அந்தப் பகுதியில் விவசாயத் தேவைகளுக்காக தடுப்பணை அமைத்து மழைநீரை தடுத்து வைத்துள்ளதே காரணம் என குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுதொடா்பாக விவசாயி மைக்கேல் கூறியது: மலைப்பகுதிகளில் மரங்கள் வெட்டி அழிக்கப்படுகின்றன. இதனால் ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மழை வளம் குறைந்துவிட்டது. மேலும், மலைப் பகுதியில் தடுப்பணை அமைத்து மழைநீரையும் தடுத்துள்ளனா். இதனால், சின்னக்கோம்பை ஆற்றில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது. இதற்குத் தீா்வு காணும் வகையில், கீழ்பழனி மலையின் கிழக்குப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், முறைகேடாகக் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை உடைப்பதற்கும் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கொடகனாறு ஏரி குளங்கள் பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் இரா.சுந்தரராஜ் கூறியதாவது: . மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டாலும் கூட, ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தின் பெரும் பகுதி தொடா்ந்து வறட்சியாகவே உள்ளது. இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், மலை வளங்களை அழித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் மீதும், தடுப்பணைகள் கட்டி மழை நீரை தடுத்துள்ளவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நதி நீா் இணைப்புத் திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.