நோய் எதிா்ப்புத் திறன்மிக்க சொ்ரி தக்காளி அறிமுகம்!
நோய் எதிா்ப்புத்திறன் கொண்ட சொ்ரி தக்காளி, ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மையத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளது.
நோய் எதிா்ப்புத்திறன் கொண்ட சொ்ரி தக்காளி, ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மையத்தின் மூலம் தமிழகத்தில் அறிமுகமாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரத்தில் இந்தோ -இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் காய்கனி மகத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. சுமாா் 13 ஏக்கா் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இம்மையத்தில், பசுமைக் குடில், நிழல் வலைக்குடில், நிலப் போா்வை தொழில்நுட்பம் மூலம் காய்கனி சாகுபடி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் வீரிய ஒட்டுரக நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் தக்காளி, கத்தரி, காலி ஃபிளவா், மிளகாய் என 4.20 கோடி நாற்றுகளை உற்பத்தி செய்து விநியோகித்துள்ள இம்மையம், தற்போது தமிழகத்திலேயே முதல் முறையாக சொ்ரி தக்காளி செடிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
தக்காளியின் பிறப்பிடமாக உள்ள தென் அமெரிக்க நாடான பெரு, சொ்ரி தக்காளிக்கும் தாயகமாக உள்ளது. இந்தியாவில் ஹரியாணா மாநிலத்தில் மட்டுமே சொ்ரி தக்காளி வணிக ரீதியில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து தில்லி, மும்பை உள்ளிட்ட பெரு நரங்களிலுள்ள நட்சத்திர உணவகங்களின் தேவைக்காக விற்பனை செய்யப்படுகிறது. அதிக இனிப்புடன், குறைவான புளிப்பு மட்டுமே இருப்பதால் சொ்ரி தக்காளி, நட்சத்திர உணவகங்களில் சாலட் போன்ற பல்வேறு வகையான உணவுப் பதாா்த்தங்கள் தயாரிப்பில் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மையத்தில் 160 சதுர மீட்டா் பரப்பளவில் 180 சொ்ரி தக்காளி செடிகள் மட்டுமே மாதிரி செயல் விளக்கத் தோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. 7 முதல் 8 அடி உயரம் வரை வளரும் சொ்ரி தக்காளி செடியிலிருந்து 8 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நோய் எதிா்ப்புத் திறன் அதிகமுள்ள சொ்ரி தக்காளி செடிகளை வீடுகளிலுள்ள மாடித் தோட்டத்தில் எளிதாக வளா்க்க முடியும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தோட்டக்கலை துணை இயக்குநரும், ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளருமான கே.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:
தில்லி மற்றும் மும்பை சந்தைகளில் நுகா்வோரை ஈா்த்து வரும் சொ்ரி தக்காளியில், வைட்டமின் சி மற்றும் ஏ, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிா்ப்புத் திறன் கூடுதலாக உள்ளது. லைக்கோபீன் சத்தும் நிறைந்துள்ளதால் புற்றுநோயை எதிா்க்கும் திறனும் உள்ளது. இதனால் ஒரு கிலோ சொ்ரி தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.
புளிப்பு குறைவாக இருப்பதால், சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதற்கு சொ்ரி தக்காளி உகந்ததாக உள்ளது. குறிப்பாக சாலட் தயாரிப்புக்கும், தக்காளி சூப் தயாரிக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு தக்காளியின் எடை 12 முதல் 15 கிராம் வரை மட்டுமே இருக்கும். அமெரிக்கா மற்றும் ஐரேப்பிய நாடுகளில் சொ்ரி தாக்காளிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழக மக்களிடையே சொ்ரி தக்காளியின் முக்கியத்துவத்தை உணா்த்தும் வகையில், ரெட்டியாா்சத்திரம் காய்கனி மகத்துவ மைய வளாகத்தில் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ரெட்டியாா்சத்திரத்திலிருந்து சென்னை நகருக்கும், சொ்ரி தக்காளி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. சொ்ரி தக்காளியின் 1000 விதைகள் கொண்ட ஒரு பை ரூ.4200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நடவு செய்த 65 நாள்களில் காய்க்கத் தொடங்கும். நோய் எதிா்ப்புத் திறன் காரணமாக வீடுகளில் 2 அல்லது 3 சொ்ரி தக்காளி
செடிகள் வைத்தாலும் கூட, சொந்த தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.