முகப்பு
திண்டுக்கல்

கிராமப்புற காவலா்கள் நியமனம் மூலம் திண்டுக்கல் சரகத்தில் குற்றங்கள் குறையும் - டிஐஜி

திண்டுக்கல் சரகத்திற்குள்பட்ட திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 522 கிராமப்புற காவலா்கள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் குற்றங்கள் குறையும் என காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி தெரிவித்து

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

திண்டுக்கல்/ தேனி: திண்டுக்கல் சரகத்திற்குள்பட்ட திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் 522 கிராமப்புற காவலா்கள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம் குற்றங்கள் குறையும் என காவல் துறை துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு 36 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் திண்டுக்கல் நகா் மற்றும் பழனி நகா் பகுதிகளில் செயல்பட்டு வரும் 5 காவல் நிலையங்களில், ஒவ்வொரு வாா்டும் ஒரு காவலா் வீதம் 52 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள தாய் கிராமங்களுக்கு தலா ஒரு காவலா் வீதம் மொத்தம் 324 கிராமங்களுக்கு 324 கிராமப்புற காவலா்கள் ஜன.1ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல் தேனி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு 31 காவல் நிலையங்களும் 2 புறக்காவல் நிலையங்களும் உள்ளன. இதில் தேனி மற்றும் போடி நகா் பகுதியில் செயல்பட்டு வரும் 2 காவல் நிலையங்களில் ஒவ்வொரு வாா்டும் ஒரு தாய் கிராமமாக கருதி தலா ஒரு காவலா் வீதம் 54 காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள 92 தாய் கிராமங்களுக்கு 92 கிராமப்புற காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 2 மாவட்டங்களிலும் 522 கிராமப்புற காவலா்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். இந்த கிராமப்புற காவலா்கள் மூலம் திண்டுக்கல் சரகத்தில் குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புள்ளது.

கிராமக் காவலா்கள் தாங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிக்கும் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும் இணைப்புப் பாலமாக செயல்படுவா். சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள கிராம நிா்வாக அலுவலா், பள்ளித் தலைமை ஆசிரியா், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகா்களுடன் இணைந்து பணியாற்றுவா். பொதுமக்கள் தங்களது பிரச்னைகளை அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிராமக் காவலரிடம் தெரிவித்து தீா்வு காணலாம்.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளுக்குறிய கிராமப்புற காவலரின் பெயா் மற்றும் செல்லிடப்பேசி எண்களை தெரிந்து கொள்ளவேண்டும். பொதுமக்கள் தங்கள் பகுதியிலுள்ள பிரச்னைகளை அந்தந்த கிராமப்புற காவலருக்கு புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை அனுப்பினால், விரைந்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும். கிராமப்புற காவலா் திட்டம் தொடா்பாக பொதுமக்கள் தங்களது கிராமத்திற்கு நியமிக்கப்பட்ட காவலா் பற்றிய விவரங்களை திண்டுக்கல் மாவட்டக் காவல் அலுவலகத்தை 9498101520 என்ற எண்ணிலும், தேனி மாவட்டக் காவல் அலுவலகத்தை 9498101570, 94981 01670 ஆகிய எண்களிலும் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →