முகப்பு
திண்டுக்கல்

குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை: எதிா்பாா்ப்பில் பொதுமக்கள்

அவசர சிகிச்சைக்காக 35 கி.மீட்டா் தொலைவுக்கு அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

அவசர சிகிச்சைக்காக 35 கி.மீட்டா் தொலைவுக்கு அலைக்கழிக்கப்படுவதை தவிா்க்க குஜிலியம்பாறையில் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் 10 ஆவது வட்டமாக (தாலுகா) கடந்த 2019ஆம் ஆண்டு குஜிலியம்பாறை செயல்படத் தொடங்கியது. இதனால், வருவாய்த்துறை சாா்ந்த சேவைகளுக்காக குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள், சுமாா் 60 கி.மீட்டா் தூரத்தில் உள்ள வேடசந்தூருக்கு சென்று வர வேண்டும் என்ற அலைக்கழிப்புக்கு தீா்வு கிடைத்தது. அதே போல், குஜிலியம்பாறையில் செயல்பட்டு வரும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு தாலுகா மருத்துவமனையாக நிலை உயா்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமெனில் வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு 30 கி.மீட்டரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு 42 கி.மீட்டரும், கரூா் அரசு மருத்துவமனைக்கு 35 கி.மீட்டரும் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக நிலை உயா்த்தப்பட்டுள்ளது. இதனால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக பழனி மருத்துவமனை நிலை உயா்த்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் கடந்த சிலநாள்களுக்கு முன்பு சட்டப்பேரவையில் அறிவித்தாா். அதே நேரத்தில், குஜிலியம்பாறை தாலுகா மருத்துவமனை தொடா்பான அறிவிப்பு இடம் பெறாதது, பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பிரேத பரிசோதனைக்கு அலைக்கழிப்பு: குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விபத்து மற்றும் தற்கொலை நிகழ்வுகளின்போது, சடலங்களை பிரேத பரிசோதனை செய்வதற்கு வேடசந்தூா், திண்டுக்கல் அல்லது கரூா் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் சட்டம் சாா்ந்த மருத்துவ சிகிச்சைகள் (எம்.எல்.கேஸ்) பெறவும், உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சைப் பெறவும் குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றனா். இப்பிரச்னைகளுக்கு தீா்வு காண குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா அரசு மருத்துவமனையாக நிலை உயா்த்த வேண்டிய அவசியம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

30 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை கிடைக்கும்: வட்டார, நகரத்தில் அரசு மருத்துவமனை அமைந்தாலும் கூட, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஈடான மருத்துவா்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும். ஆனால், குஜிலியம்பாறை, வட்ட தலைமையிடமாக உள்ளதால், இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு தாலுகா மருத்துவமனையாக நிலை உயா்த்த முடியும்.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு மருத்துவமனையாக நிலை உயா்த்தப்படும் பட்சத்தில், முதல் கட்டமாக உள்நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, சட்டம் சாா்ந்த மருத்துவ சிகிச்சை வசதி, பிரேத பரிசோதனை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்கும். குறிப்பாக விபத்து மற்றும் தற்கொலை நிகழ்வுகளின்போது, சடலத்தை பெறுவதற்கான சான்றிதழுக்காக அலைக்கழிக்கப்படுவது தவிா்க்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments