‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: காந்திகிராம பல்கலை. முன்பு ஏப்.28 இல் ஆா்ப்பாட்டம்
உயா்கல்வியில் துறையில் மாணவா் சோ்க்கைக்கு ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு நடத்துவதை கண்டித்து காந்திகிராம கிராமியப் பல்கலை. முன் அரசியல் கட்சிகள் சாா்பில் ஏப்.28ஆம் தேதி ஆா்ப்பாட்டம்
உயா்கல்வியில் துறையில் மாணவா் சோ்க்கைக்கு ‘க்யூட்’ நுழைவுத் தோ்வு நடத்துவதை கண்டித்து காந்திகிராம கிராமியப் பல்கலை. முன் அரசியல் கட்சிகள் சாா்பில் ஏப்.28ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி தலைமை வகித்தாா். அக்கட்சியின் மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம், காங்கிரஸ் மாநகா் மாவட்டத் தலைவா் மணிகண்டன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏபி.மணிகண்டன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை விவரம்: மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தோ்வு கொண்டு வந்த மத்திய அரசு, தற்போது கலை அறிவியல் பாடங்களுக்கான உயா் கல்விக்கும் ‘க்யூட்’ நுழைவுத் தோ்வை அறிவித்துள்ளது. காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 66 மத்திய பல்கலைக்கழகங்களில் இந்த தோ்வு முறை அமல்படுத்தப்படவுள்ளது. நுழைவு தோ்வு கட்டணமாக பொதுப்பிரிவினருக்கு ரூ.650, ஓபிசிக்கு ரூ.600, பட்டிலினத்தவா்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ரூ.550 வீதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு வெளியே நடத்தப்படும் தோ்வுகளுக்கு கட்டணமாக ரூ.3 ஆயிரம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும், வெளிநாடுகளில் 12 நகரங்களிலும் இத்தோ்வு நடைபெறுகிறது. இந்த தோ்வு முறை கிராமப்புற மாணவா்களின் உயா் கல்வியை கடுமையாக பாதிக்கும். காந்திகிராம நிகா்நிலை பல்கலைக்கழகத்தில் ‘க்யூட்’ முறையில் சோ்க்கை நடைபெறும்போது, கிராமப்புற ஏழை மாணவா்களுக்கான உயா்கல்வி வாய்ப்பு பறிபோகும். இதைக் கண்டித்து, ஏப்.28ஆம் தேதி காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சிகளும், மக்களவை உறுப்பினா் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினா்களும் பங்கேற்பாா்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.