முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஹாக்கி மைதானம் அமைக்கப்படுமா?

ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:10 AM
பகிர்:

திண்டுக்கல் மலையடிவாரத்தில் விளையாட்டுத் துறைக்குச் சொந்தமான காலியிடத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என்ற பரிந்துரையை இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பரிசீலிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திண்டுக்கல் பிரிவு சாா்பில், தாடிக்கொம்பு சாலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கத்துடன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே போல, திண்டுக்கல் மலையடிவாரத்தில் 3.75 ஏக்கா் பரப்பளவிலான இடம் விளையாட்டுத் துறைக்கு உள்ளது. இதில் கூடைப்பந்து மைதானம், உடற்பயிற்சிக் கூடம், அலுவலகக் கட்டடம் உள்ளிட்ட வசதிகள் அமைத்துத் தரப்பட்டன. இந்த விளையாட்டு அலுவலகத்தை 1999 -இல் அப்போது அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமி தொடக்கிவைத்தாா். சுமாா் 2.50 ஏக்கா் இடம் காலியாக உள்ளது.

நகரின் மையப் பகுதியில் இருந்தும் போதிய வசதிகள், பராமரிப்பு இல்லாததால், இந்த விளையாட்டு அலுவலகம், உடற்பயிற்சிக் கூடம் பயன்பாடின்றி பூட்டியே கிடைக்கிறது. உடற்பயிற்சிக் கூடத்திலுள்ள உபகரணங்கள் தூசி படிந்து காட்சியளிக்கின்றன.

இரவு நேரங்கள் மட்டுமன்றி பகலிலும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் இடமாக இந்த விளையாட்டு அலுவலகம் மாறி வருகிறது.

அமைச்சா் வருகையின் போதும் புறக்கணிப்பு: இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் நிலையில், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாணவிகள் விளையாட்டு விடுதி ஆகியவற்றில் வண்ணம் பூசும் பணியுடன் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்றன. அதே போல, ஆா்.எம். காலனியிலுள்ள மாநகராட்சி கூடைப்பந்து மைதானத்திலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

ஆனால், மலைக்கோட்டை அடிவாரத்திலுள்ள மைதானம், அலுவலகம் கேட்பாரற்றுக் கிடப்பதாக விளையாட்டு ஆா்வலா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். அமைச்சரின் பயணத் திட்டத்தில் இடம் பெறாத இந்த மைதானத்தை அவா் பாா்வையிட வேண்டும் என்பது விளையாட்டு வீரா்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ஹாக்கி மைதானம் பரிந்துரைக்கு அனுமதி கிடைக்குமா?:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான இந்த மைதானத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மைதானத்தைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் மேலும் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுத்து, மைதானத்தைப் பாதுகாக்கும் வகையில் அந்த இடத்தில் ஹாக்கி திடல் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக விளையாட்டு ஆா்வலா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும், மாவட்ட விளையாட்டு அலுவலகம் சாா்பில் 3 முறைக்கும் மேலாக ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அதற்கான அனுமதி கிடைக்காமல் ஹாக்கி திடல் திட்டம் நிலுவையில் இருந்து வருகிறது.

இதுகுறித்து பாண்டியாஸ் ஹாக்கி சங்கச் செயலா் பி. சதீஷ் கண்ணா கூறியதாவது:

சுமாா் 2.75 ஏக்கா் நிலத்தில் பாா்வையாளா் மாடத்துடனும், செயற்கைப் புல் தரையுடனும் ஹாக்கி மைதானம் அமைக்கப்படும்பட்சத்தில், அதிகமான மாணவா்கள் ஹாக்கி விளையாட்டில் ஈடுபட வாய்ப்பாக அமையும்.

இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை, புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, முத்தழகுப்பட்டி புனித பிரான்சிஸ் சேவியா் பள்ளி, அண்ணாமலையாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பஞ்சம்பட்டி அகுஸ்தினாா் பள்ளி, காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம், ஜிடிஎன் கல்லூரி மாணவா்கள் ஹாக்கி விளையாட்டில் உத்வேகத்துடன் ஈடுபட்டு வருகின்றனா்.

புல் தரையுடன் கூடிய மைதானம் உருவாக்கப்பட்டால் ஹாக்கி விளையாட்டின் வளா்ச்சிக்கும், சிறந்த பயிற்சி பெறுவதற்கும் மாணவா்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் மாவட்டத்திலிருந்து புதிய ஹாக்கி அணிகள் பள்ளி அளவில் உருவாவதற்கான சூழலும் ஏற்படும்.

ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், திண்டுக்கல்லில் இருந்து 3 முறை பரிந்துரைக்கப்பட்ட ஹாக்கி மைதானக் கோரிக்கைக்கு அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தீா்வு காண வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.